சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்ட இடத்துக்கு (07) சென்று பட்டதாரிகளை அவர் சந்தித்தார்.
இதன்போது, அவரிடம், ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இப்பொழுது ஆட்சியல் உள்ள ஜனாதிபதி கூட தேர்தலில் போட்டியிடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது. உண்மையில் வேட்பாளர்கள் எல்லோரும் தெரிவு செய்யப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என தீர்மானம் எடுக்கும்.
அதேவேளை, சிறுபான்மையை சேர்ந்தவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. வெறுமனவே இரண்டு இலட்சம் மூன்று இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் எந்தவொரு நன்மையும் இல்லை.
தமிழ் மக்களுக்கு அதிகார பரவலாக்கம் தொடக்கம் காணி பிரச்சினை போன்ற நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை தீர்த்துத் தரக்கூடிய, வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை அடையாளம் கண்டு அவரை ஆதரிப்பதே சிறந்தது.
இலட்சக்கணக்கான வாக்குகளை கொடுத்து அவருடன் உடன்படிக்கையை செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பொருத்தமானது. இது, என்னுடைய தனிப்பட்ட கருத்து.
அதேவேளை, 2015ஆம் ஆண்டு சட்டதிருத்தம் செய்கின்றபோது சட்டத்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம் உட்பட எல்லோரும் தவறிழைத்து விட்டன.
இது தொடர்பாகவும் பட்டதாரிகளின் நியமனக் கோரிக்கை தொடர்பாகவும் கிழக்கு மாகாண அளுநரிடம் கலந்துரையாடி அவரை சந்திக்க வாய்ப்பு எற்படுத்தப்படும். ஜனாதிபதியின் கவனத்திற்கும் இவ்விடயத்தை கொண்டு செல்வோம்” இவ்வாறு ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment