இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு சிபாரிசு செய்வதில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையிலான முஸ்லிம் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் 9 ஆம் திகதி தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் முஸ்லிம் சிவில் அமைப்புகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மூலம் பொது மன்னிப்புப் பெற்றுக் கொடுப்பதற்கான சிபாரிசுக் கடிதத்தை வழங்குமாறு பெளத்த அமைப்புகள் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்த வேண்டுகோளின் சாதக பாதகங்கள் மற்றும் இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் தலையிடுவதில் உள்ள அபாயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையிலேயே இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் எந்தவொரு நிலைப்பாட்டையும் முன்வைப்பதில்லை என்றும் கோரப்பட்ட சிபாரிசுக் கடிதத்தை வழங்குவதில்லை என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் பின்னர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் எமது கைகளில் இல்லை. அதனை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் முன்கொண்டு செல்லப்படும் பிரசாரங்களில் உண்மை இல்லை. இந்த விடயத்தில் உலமா சபை தன்னிச்சையாக தீர்மானம் எடுக்காது” என்றார்.
அத்துடன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு உலமா சபை தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட செய்திகளையும் அவர் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment