அரசாங்கமே தேர்தலுக்கு பயந்துள்ளது, இதனாலே நீதிமன்றத்தை நாடுகின்றனர் - எஸ்.எம்.மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 11, 2024

அரசாங்கமே தேர்தலுக்கு பயந்துள்ளது, இதனாலே நீதிமன்றத்தை நாடுகின்றனர் - எஸ்.எம்.மரிக்கார்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும். ரணில் விக்ரமசிங்க மொட்டுடன் சேர்ந்து வந்தாலும் பிரிந்து வந்தாலும் தேர்தலில் தோல்வியடைவார். மஹிந்தவே ஆரம்பத்தில் கட்சிகளை பிளவுபடுத்தினார். இப்போது அவரின் கட்சி பிளவடைந்துவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற மதுவரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், இந்த அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் புதிதாக வரிகளை அறவிடும் யோசனைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்கும்போது இது நன்மையான திட்டம், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று கூறுவதையே நாங்கள் கடந்த 2 வருட காலங்களாக காண்கின்றோம்.

அத்துடன், தற்போதைய ஜனாதிபதி சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, சர்வதேச தொடர்புகள் உள்ளவர் என்றே கூறுகின்றனர். ஆனால் கடந்த 2 வருடங்களில் ஒரு ரூபாவேனும் நேரடி முதலீடாக இந்த நாட்டுக்கு வரவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க செயற்றிட்டங்கள் முன்னெடுக்கவில்லை. இதன் மூலம் டொலர் வருவாயை அதிகரித்து நீண்டகால இலக்கை நோக்கிச் செல்ல இந்த அரசாங்கம் தவறியுள்ளது.

புதிய வர்த்தக சந்தைக்குள் நுழைந்து டொலர்களை பெற்றுக் கொள்ளும் முறைமைகளை இந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை. வங்குரோத்து நாடாக கடன் மறுசீரமைப்பு முடிந்த பின்னர் கடனை செலுத்த வேண்டும். ஆனால், அதற்கான டொலரை தேடும் முறைமையை தயாரிக்கவில்லை. கடனை செலுத்த ஆரம்பிக்கும்போது பில்லியன் டொலர் வரையில் வட்டியாக செலுத்த வேண்டியேற்படும்.

இதேவேளை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை நாங்கள் அனுமதிக்காவிட்டாலும் அவர்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

இந்நிலையில், அது தொடர்பில் அச்சுறுத்தல் விடுத்து சம்பளத்தை அதிகரித்தால் 21 வீதம் வரையில் வட் வரியை அதிகரிக்க நேரிடும் என்று நிதி அமைச்சின் செயலாளர் கூறுகின்றார். இப்படி கூறும்போது அடுத்த வீட்டில் இருக்கும் அரச ஊழியர் தொடர்பாக அடுத்த வீட்டுக்காரர் கோபமடையும் நிலைமையே ஏற்படும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அரசாங்கம் தேர்தலுக்கு பயந்துள்ளது. இதனால் தேர்தலை தடுக்க நீதிமன்றத்தை நாடுகின்றனர். மக்கள் இப்போது போராட்டம் நடத்தாவிட்டாலும் ஜனநாயக ரீதியிலான சந்தர்ப்பத்தின்போது மக்கள் பதிலளிப்பர்.

மொட்டுடன் சேர்ந்து வந்தாலும் பிரிந்து வந்தாலும் ஜனாதிபதி தோல்வியடைவார். மஹிந்தவே ஆரம்பத்தில் கட்சிகளை பிளவுபடுத்தினார். இப்போது அவரின் கட்சியே பிளவடைந்துவிட்டது. இவர்களை மக்கள் தோற்கடிப்பர்.

எவ்வாறாயினும், அரசாங்கம் இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும். அரச வருமானத்தை டொலரால் அதிகரிக்க நேரடி முதலீடுகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையில்லை. அவர்களிடம் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். ஏற்றுமதி மற்றும் முதலீட்டால் டொலர் வருமானத்தை ஏற்படுத்தும் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment