இரா. சம்பந்தன் மறைவினால் ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து பாராளுமன்றத்தின் உறுப்புரிமையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
திருகோணமலை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனது மறைவினால் அரசியலமைப்பின் 66 (அ) உறுப்புரையின் பிரகாரம் 2024 ஜூன் 30 ஆம் திகதியிலிருந்து பாராளுமன்றத்தின் உறுப்புரிமையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அவரது மறைவினை இப்பாராளுமன்றத்திற்கு தான் மிகவும் கவலையுடன் அறிவிப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு பாராளுன்றம் சார்பில் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
இது தொடர்பான அனுதாபப் பிரேரணை பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த சபாநாயர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அன்னாரது பூதவுடல் நாளை (03) பாராளுமன்றப் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வைபவ மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையில் வைக்கப்படுமென்பதை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “வெளிநாட்டு தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு 2024.07.01 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
No comments:
Post a Comment