ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதற்காக 8,000 அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதித் தபால்மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தபால்மூல வாக்குகளுக்கான அட்டைகள் மற்றும் விசேட கடிதங்களை விரைவாக விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை, திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் எதிர்வரும் (05) தபாலில் இடப்பட்டால் அவை செல்லுபடியாகாது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்பதாக கிடைக்கும் வகையில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தபால் திணைக்கள ஊழியர்கள், ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாதவாறு தொடர்ந்தும் கடைமகளில் ஈடுபட்டு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment