இலங்கையில் எலி காய்ச்சலினால் அதிகளவு பெண்கள் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 20, 2024

இலங்கையில் எலி காய்ச்சலினால் அதிகளவு பெண்கள் பாதிப்பு

இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) எனப்படும் எலி காய்ச்சலினால் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்துள்ளதாவது, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் இரத்தினக்கல் அகழ்வு போன்ற தொழில்களில் ஈடுப்படும் ஆண்களை எலி காய்ச்சல் பீடிக்கின்றது.

ஆனால், பல ஆண்டுகளாக பெண்கள் எலி காய்ச்சலினால் பாதிக்கப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.

இந்தக் காய்ச்சலினால் கடந்த ஆண்டு 9000 பேர் பாதிக்கபட்டிருந்தனர். இவ் ஆண்டு இதுவரை 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

எலி காய்ச்சல் (Leptospirosis) என்பது ஒருவகை பக்டீரியாவின் மூலம் பரவுகிறது. எலி காய்ச்சலைப் பரப்பும் பக்டீரியாவானது, பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும். எலியின் சிறுநீர், மலத்தில் இந்த பக்டீரியா வெளியேறும். எலியின் கழிவுகள் கலந்த தண்ணீர் அல்லது உணவை நாம் உட்கொள்ளும்போது எலி காய்ச்சல் ஏற்படும்.

எலியின் கழிவுகளை நாம் மிதித்துவிட்டால், நம் உடலில் உள்ள காயங்கள், சிராய்ப்புகள், உலர்ந்த பகுதிகள், வாய், மூக்கு, அந்தரங்கப் பகுதிகள் வழியாக பக்டீரியாக்கள் உடலுக்குள் சென்றுவிடும்.

கடுமையான மழையைத் தொடர்ந்து தொற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கிறது, இது நீர் ஆதாரங்கள் மாசுபடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

இந்த காய்ச்சல், தசை வலி, மஞ்சள் காமாலை, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகிறது. கடுமையான சந்தர்ப்பங்களில், சிறுநீரகம், இதயம் அல்லது சுவாச செயலிழப்புக்கு வழிவகுக்கும். எலிக்காய்ச்சலுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.

பாதுகாப்பான சுகாதார வழிமுறைகசளை கடைப்பிடிக்க வேண்டும், அசுத்தமான தண்ணீருடன் தொடர்பை தவிர்த்தல்,முறையான கழிவு முகாமைத்துவம் போன்றவற்றால் நோய் பரவலை தடுக்கலாம்.

அத்துடன், எலி காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் இரத்தினக்கல் அகழ்வு போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment