கல்முனை வடக்கு பிரதேச செயலக கோரிக்கையை நிராகரிக்கவில்லை, அமைச்சின் செயலாளர் நேரில் சென்று தீர்வு காணவும் நடவடிக்கை - பிரதமர் தினேஸ் குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, June 20, 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலக கோரிக்கையை நிராகரிக்கவில்லை, அமைச்சின் செயலாளர் நேரில் சென்று தீர்வு காணவும் நடவடிக்கை - பிரதமர் தினேஸ் குணவர்தன

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பான கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை, இது தொடர்பில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழு அந்தப் பிரதேசத்திற்கு சென்று, கலந்துரையாடல்களை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமென, பிரதமர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குறைநிரப்பு மதிப்பீட்டு தீர்மானம் மீதான விவாதத்தின்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர், எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

செல்வராசா கஜேந்திரன் எம்.பி அது தொடர்பில் தெரிவிக்கையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கணக்காளர் ஒருவரை நியமிக்க கோரி அந்த பிரதேச மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் பிரதமருக்கும் ஆலோசனைக் குழுவுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால் மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துகின்றனர். அதனைக் கவனத்திற் கொண்டு உடனடியாக அதற்கு தீர்வு காணுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி குறிப்பிடுகையில், கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் தொடர்ந்து மூன்று மாதங்களாக போராட்டம் இடம்பெற்று வருகிறது. இது தொடர்பாக உங்களுடன் தொலைபேசியிலும் கதைத்தோம். உங்களது காரியாலயத்துக்கும் வந்து கலந்துரையாடி இருந்தோம். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அங்கு வந்து இது தொடர்பாக பார்ப்பார் என நீங்கள் தெரிவித்தீர்கள். ஆனால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இதுவரை அங்கு வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் உரிய பணிப்புரையை வழங்கியும் அரசாங்க அதிபர் அங்கு வரவில்லை. இதற்கான பிரதமரின் பதிலை நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது பதிலளித்த பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரான தினேஸ் குணவர்தன, இருவரும் கூறும் விடயம் உண்மையானதே.

இவர்கள் என்னை சந்தித்தனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று கணக்காளர் ஒருவர் அங்கு நடமாடும் சேவையில் ஈடுபடுவதற்கும் அந்த செயலகத்தில் மக்களுக்கு தேவையான பணிகளை முன்னெடுக்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

அதேபோன்று கல்முனையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கொன்றும் உள்ளது. இதன்படி அந்தப் பிரதேசத்தில் நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன.

அவற்றைக் கவனத்தில் கொண்டு நாம் கலந்துரையாடி அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அமைச்சின் செயலாளர் கல்முனைக்கு சென்று கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment