யாப்புக்கமைய நானே கட்சியின் தலைவர், புதிய இலச்சினையில் போட்டியிடும் - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் - News View

About Us

About Us

Breaking

Monday, June 24, 2024

யாப்புக்கமைய நானே கட்சியின் தலைவர், புதிய இலச்சினையில் போட்டியிடும் - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்புக்கமைய நானே கட்சியின் தலைவர். நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக தற்போதைக்கு அந்த பதவியில் செயற்படுவதில்லை. அத்துடன் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய இலச்சினையில் போட்டியிடும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (23) கண்டியில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பின் பிரகாரம் நானே கட்சியின் தலைவர். என்றாலும் நான் தலைவராக செயற்பட நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு ஒன்று இருப்பதால் தற்போதைக்கு தலைவர் பதவியில் செயற்படுவதில்லை. மிக விரைவில் நீதிமன்றம் இது தொடர்பில் தீர்ப்பொன்றை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். கட்சியின் தலைமை அலுவலத்தை கைப்பற்றிக் காெண்டிருப்பதால், அவர்கள் யாரும் தலைவர்களாக முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1994 இல் இருந்து 5 பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுத்தது, வெவ்வேறு இலச்சினைகளில் ஆகும். கைச் சின்னம். கதிரை, வெற்றிலை, அன்னம், மொட்டு என பல சின்னங்களில் பாேட்டியிட்டிருக்கிறது. ஆனால் அதன் கொள்கையில் இருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. அதன் பிரகாரம் எதிர்வரும் தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடந்த கால சின்னம் அல்லாது பொருத்தமான சின்னத்தை அறிமுகப்படுத்துவோம்.

மேலும் நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு நான் எப்போதும் எதிராக இருந்தவன். கடந்த அரசாங்க காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய முற்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறினேன். தற்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன். என்றாலும் சில அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. அவற்றை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். வெற்றியும் ஈட்டுவேன். நான் ஜனாதிபதியானதும். அரசியலமைப்பின் பிரகாரம் எனக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வழக்கு நடவடிக்கைகளும் இரத்தாகும். அப்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் எந்த பிரச்சினையும் எழப்போவதில்லை.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்புடன் விளையாட யாருக்கும் இடமளிக்கப்போவதில்லை. அதனால் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நாங்கள் நடத்தியே ஆகுவோம். அதில் சந்தேகம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment