ஜனாதிபதியின் கருத்து உயர் நீதிமன்றத்திற்கும் நாட்டின் நீதி அமைப்பிற்கும் அச்சுறுத்தலானது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 19, 2024

ஜனாதிபதியின் கருத்து உயர் நீதிமன்றத்திற்கும் நாட்டின் நீதி அமைப்பிற்கும் அச்சுறுத்தலானது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

பாலின சமத்துவ சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சாடும் விதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து உயர் நீதிமன்றத்திற்கும் நாட்டின் நீதி அமைப்பிற்கும் அச்சுறுத்தலானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் கருத்து அரசமைப்பு வழங்கிய அதிகாரத்தின்படி நீதித்துறையின் செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் உயர் நீதிமன்றத்திற்கும் முழு நீதித்துறை அமைப்பிற்கும் அச்சுறுத்தலான ஒன்று என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஏற்படுத்துவது ஆபத்தான முன்னுதாரணமாக விளங்கும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் கருத்தும் நடவடிக்கைகளும் நீதித்துறையின் சுதந்திரத்தினை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்திலானது என கருதுவதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர் நீதிமன்றம் அரசமைப்பிற்கு முரணாணது என அறிவித்துள்ள சட்டமூலத்தை பலவந்தமாக நிறைவேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

நீதித்துறை சுதந்திரமாக செயற்படுவதற்கும் வெளி அழுத்தங்கள் இல்லாமலும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சட்டமூலம் நாட்டின் அதி உச்சசட்டத்துடன் ஒத்துப்போகின்றதா என்பதை மதிப்பிடுவதன் மூலம் உயர் நீதிமன்றம் தனது கடமையை நிறைவேற்றியுள்ளது என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தனி நபர்களிற்கு அதனை ஏற்பதற்கும் நிராகரிப்பதற்கும் உரிமையுள்ளது ஆனால் நாடாளுமன்றமோ நிறைவேற்றதிகாரமோ மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவதற்காக நீதித்துறையை விமர்சிக்ககூடாது எனவும் தெரிவித்துள்ளது.

நீதிதுறையின் செயற்பாடுகளிற்கு மதிப்பது நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறையின் கடமை என வலியுறுத்தியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எந்தவொரு தலையீடும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment