(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக 2023 இல், வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 02 இலட்சத்து 89 ஆயிரத்து 287 பேர் என்றும் இவர்கள் 5,970 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) வாய் மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ரத்னசேகர எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக தென் கொரியா, ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக தொழிலுக்கு இலங்கையர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தனியார் முகவர் நிறுவனத்தின் மூலம் சவூதி அரேபியா, குவைத், ஜோர்தான், சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம், சைப்பிரஸ், மலேசியா, மாலை தீவு, தென்கொரியா, ருமேனியா சேர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இலங்கையர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் தென் கொரியாவுக்கு 6377 பேரும், ஜப்பானுக்கு 601பேரும், இஸ்ரேலுக்கு 828 என 7806 பேர் அரசாங்கத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு தனியார் முகவர் நிறுவனம் மூலம் சவூதி அரேபியாவுக்கு 663 பேரும், 2023 ஆம் ஆண்டில்அனுப்பப்பட்டுள்ளனர். அந்த ஆண்டில் அரசாங்கத்தின் தலையீடு இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 89 ஆயிரத்து 287 பேர் ஆகும்.
அதேவேளை, இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மூலம் நாட்டுக்கு 5970 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் கிடைத்துள்ளன.
நாம் கடந்த வருடத்தில் மேற்படி அமைச்சை பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 11.3 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை இவ்வாறு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
சில தரப்பினர் நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என கூறியபோதும் எமது மக்கள் பணம் அனுப்பியுள்ளனர்.
இலங்கையிலிருந்து வீட்டுப் பணிப் பெண்களாகவும் வேறு தொழில்களுக்காகவும் எமது மக்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். முதல் தடவையாக அவ்வாறு தொழிலுக்கு செல்வோருக்கு பயிற்சிகளை வழங்குகின்றோம். கொரியாவுக்கு தொழிலுக்கு செல்வோருக்காக மொழி பயிற்சியும் மேலும் 10 நாள் தொழிலுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது என்றார்..
No comments:
Post a Comment