கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட விவகாரம் தற்போது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே இந்த விடயம் அரசியல் மேடைகளில் பேசுபொருளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்களின் கொவிட் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலையும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறியே இலங்கை இந்த கடினமான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது.
இந்த அநியாயத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கூட எந்தவித விசாரணைகளுமின்றி தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்கான பிரதான காரணம் சுகாதார அமைச்சினால் அப்போது நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் கண்மூடித்தனமான தீர்மானமாகும்.
பேராசிரியை மெத்திகா விதானகே போன்ற இனவாத சிந்தனை கொண்டவர்களே நிபுணர் குழுவை தவறாக வழிநடாத்தி இந்த தீர்மானத்திற்கு வித்திட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தால், அந்த உடல்களிலுள்ள வைரஸ் நீரின் ஊடாக பரவும் என்ற விஞ்ஞான உண்மைகளுக்குப் புறம்பான கருத்தினை இந்த நிபுணர்கள் முன்வைத்தனர்.
எனினும், குறித்த விடயம் தற்போது பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில்தான் கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றினை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பலவந்தமாக உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்புக் கோரினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர் “இது விடயமாக ஆராய இலங்கையில் நாங்கள் ஒரு குழுவை நியமித்தோம். துரதிர்ஷ்டவசமாக, அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று குழு பரிந்துரைத்தது. உலக சுகாதார நிறுவனம் வேறுபட்ட கருத்தை எடுத்தது.
ஆனால் பின்னர் உயர் நீதிமன்றம் அந்தக் குழுவின் பரிந்துரையை உறுதி செய்தது. எனவே அதை அரசாங்கம் பின்பற்ற வேண்டியேற்பட்டது. அப்போது மாற்று வழி இருக்கவில்லை. ஆனால் இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டது.
இந்த நாட்டில் அடக்கப்படுவதா அல்லது எரிக்கப்படுவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். எனவே, இறந்தவரின் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ அல்லது மருத்துவ பீடத்திற்கு தானமாக வழங்கவோ உரிமை வழங்கும் சட்டத்தை இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கொண்டு வரவுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில், முக்கியமாக முஸ்லிம் மக்களுக்கு மன ரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் எனக்கு தெரிந்த இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதை விரும்புகிறார்கள். எனவே நடந்ததற்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது தொடர்பாக முன்வைக்கப்படும் சட்டமூலத்திற்கு இந்தச் சபை ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் இந்த விடயம் தொடர்பில் உரையாற்றினர்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத அடிப்படையில் செயற்பட்டு ஜனாஸாக்களை எரித்தது என எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டினார்.
தேசிய ரீதியாக நிபுணர் குழுவொன்றை நியமித்து அவர்களின் பரிந்துரை என்ற பெயரில் செயற்பட்டு, முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பேராசிரியர் மெத்திக்கா என்பவரின் பொய்யான இனவாத கருத்தினாலேயே கட்டாய தகனம் எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஜனாதிபதியும் அமைச்சர்களும் எதிர்க்கட்சி யினரும் மாறி மாறி அறிக்கைகளை விடுகிறார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வருவதாக தெரியவில்லை.
ஆகக் குறைந்தது, புதிய சட்டத்தினை விரைவில் பாராளு மன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையினை கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது கட்டாயத் தேவை என வலியுறுத்த விரும்புகிறோம்.
Vidivelli
No comments:
Post a Comment