சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 20, 2024

சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று (20) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜி.எல். பீரிஸ், எரான் விக்கிரமரத்ன, நிரோசன் பெரேரா, பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அண்டைய நாடான இந்தியாவிடம் இருந்து கிடைத்த உதவிகள் மற்றும் ஒத்தாசைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக உள்ள நட்புறவு,  ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும்  அவ்வாறே பேணப்படும் என்றும் என்றும்  இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார்.

இலங்கையின் வீடமைப்புத் திட்டங்களுக்கும் சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கும் இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்பை என்றும் மறக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். 

இந்திய அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஸ்மார்ட் கல்வியையும் புதிய உலகிற்கு ஏற்ற கல்விக் கொள்கையையும் உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், மீண்டும் ஒருமுறை இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள  நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு இரு நாடுகளுக்கும் இடையே இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவைப் பேணத் தயாராக இருப்பதாகவும் நட்பை மேலும் வளர்த்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment