(எம்.மனோசித்ரா)
இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக இலங்கை - இந்திய வளர்ச்சிக் கூட்டாண்மை மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர் இன்று வியாழக்கிழமை இலங்கை வந்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் வே.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான், இ.தொ.கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கல்வி இராஜங்க அமைச்சர் அறவிந்த குமார் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா எப்போதும் பலம் மிக்கதாக இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்தான் இலங்கையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என ஜெய்ஷங்கரிடம் தெரிவித்ததாக த.மு.கூ. பிரதித் தலைவர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
சீதையம்மன் ஆலயம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையில் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் அதனை அபிவிருத்தி செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் அவதானம் செலுத்துமாறு உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் 4000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்யுமாறும், அதன் பின்னர் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை மலையகத்தில் முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டதாக இராதாகிருஸ்ணன் மேலும் தெரித்தார்.
No comments:
Post a Comment