கடலில் மிதந்த போத்தலில் மதுபானம் என அருந்திய 3 பேர் பலி : உயிராபத்தான நிலையில் மேலும் 3 பேர் : மேலும் சில படகுகளுக்கு வழங்கியதாக தகவல் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 29, 2024

கடலில் மிதந்த போத்தலில் மதுபானம் என அருந்திய 3 பேர் பலி : உயிராபத்தான நிலையில் மேலும் 3 பேர் : மேலும் சில படகுகளுக்கு வழங்கியதாக தகவல்

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்குச் சென்ற 6 மீனவர்கள், கடலில் மிதந்து வந்த போத்தல்களில் இருந்த திரவத்தை அருந்தியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பல நாள் மீன்பிடிக் படகில் மீன்பிடிக்கச் சென்று குறித்த மீனவர்கள் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்தல்களை கண்டெடுத்துள்ளனர். அதில் மதுபானம் இருப்பதாக நினைத்து அதனை அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திரவம் விஷமானதில் குறித்த மீனவர்கள் குழுவினர் உயிராபத்தான நிலையில் இருந்துள்ள நிலையில், அதில் 2 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களத்தை தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, குறித்த குழுவினருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி அவர்களை உடனடியாக கரைக்கு கொண்டுவர உதவுமாறு இலங்கை கடற்படையின் உதவியை திணைக்களம் நாடியுள்ளது.

இன்று (29) பிற்பகல் இது தொடர்பில் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள நீரியல் வளத் திணைக்களத்தில் உள்ள, கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையின் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சுமார் 365 கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் போராடும் மீனவர்களுக்கு உதவும் வகையில், அப்பகுதியில் செல்லும் கப்பலொன்றுக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கடற்படை வைத்தியர்களால் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வைத்திய அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகவும், இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த மீனவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் அவர்களை கரைக்கு கொண்டுவரவும், குறித்த கடல் பகுதிக்கு இலங்கை கடற்படை கப்பலான விஜயபாகுவை மருத்துவ குழுவுடன் அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை இது தொடர்பில் தெரிவித்துள்ள, கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அவர்கள் மிகவும் ஆழ் கடலில் உள்ளதாகவும், குறித்த பகுதிக்கு கப்பலை அனுப்ப போதுமான நேரம் இல்லை எனவும், குறித்த வழியாக செல்லும் மற்றொரு கப்பல் மூலம் அவர்களுக்கு உதவிகளை வழங்க முயற்சி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த மீனவர்கள் மீட்ட சில போத்தல்களை மேலும் சில படகுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுதாகவும், ஏனைய படகுகளிலும் இந்த போத்தல்கள் இருக்கலாம் என்பதால், ஏனையோரை அறிவுறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது குறித்த கப்பல் சர்வதேச கடலில் இருந்து 320 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ளதாகவும், அதன் வேகம் மணித்தியாலத்திற்கு 7 கடல் மைல் எனவும், அது கரையை அடைய சுமார் 2 நாட்கள் வரை ஆகலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது குறித்த மீனவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த 6 பேரில் 3 பேர் உயிருக்காக போராடி வருகின்றனர்.

No comments:

Post a Comment