சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புகளுக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுக் கூட்டம், நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நிதி அமைச்சில் நடைபெற்றது.
இந்த குழுக் கூட்டம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் தற்போதைய பொருளாதார நிலைக்கேற்ப வட்டி வீதத்தை எவ்வளவு அதிகரிக்க முடியுமென்பதை கண்டறிந்து அதற்கேற்ப செயற்படுமாறு அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களது கணக்குகள் சுமார் 1.1 மில்லியன் உள்ளன. அவற்றை முறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, ஒரே நபர் பல வங்கிக் கணக்குகளை பராமரித்து வருவதையும் அந்தக் கணக்குகளில் பிற தரப்பினரின் பணத்தை வைப்பிலிடுவதை குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தேடுதல்களின் அவசியமும் இங்கு வெளிப்படுத்தப்பட்டன.
இது தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை சமுர்த்தி, கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அரச நிறைவேற்று உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான பல யோசனைகளும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
நிதி அமைச்சின் பிரதி செயலாளர்கள், தேசிய வரவு செலவு திணைக்களம், அபிவிருத்தி நிதித் திணைக்களம், திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம், பொது நிறுவனங்கள் திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் உயரதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment