எந்தவொரு கட்சியும் செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு செய்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 7, 2024

எந்தவொரு கட்சியும் செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு செய்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர்

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு ஏற்படும் பல பேரிடர்களை களைய ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் பெண் பிள்ளைகளின் உடலுறவுக்கான வயதெல்லையை 16 இல் இருந்து 14 ஆக குறைத்துள்ளது. பெண் ஆண் பலாத்காரத்தையும் ஒன்றாக இணைத்து பலாத்காரத்தால் அதிகம் பாதிக்கப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்பிடத்தை மறுத்து, 22 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இது தொடர்பில் தொடர்ச்சியாக குரல் எழுப்பியதன் விளைவாக இந்த அவமானகரமான பிரேரணையை அரசாங்கம் வாபஸ் பெற நேரிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பெண்களின் ஆரோக்கியத் துவாய் குறித்து பேசியதற்காக 2019 இல் தான் கேலி செய்யப்பட்டாலும், 5 ஆண்டுகளாக தொடர்ந்து இது குறித்து பேசி வந்தேன். இது குறித்து பாராளுமன்றத்தில் பேசும் போது, ​​சிரித்தனர், கேலி செய்தனர், சமூக வலைதளங்கள் மூலம் சேறுபூசினர், என்றாலும் தொடர்ந்து உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தியதன் விளைவாக பாடசாலை மாணவிகளுக்கு இலவச ஆரோக்கியத் துவாய் வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. எந்தவொரு கட்சியும் செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘மக்கள் அரண்’ வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது பங்கேற்புடன் நேற்று (6) குருநாகல் ஹிரிபிட்டிய நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் கிராம இராஜ்ய கருத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தால் உருவாக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய தகவல் மற்றும் தரவுகளை மையமாகக் கொண்ட கொள்கை வகுப்பாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தோசித்துள்ளோம். நாட்டின் குடிமக்கள் நாட்டின் ஆட்சி முறையின் முக்கிய பங்குதாரர்களாகவும், முன்னோடிகளாகவும், தலைவர்களாகவும் ஆக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தமது பிரதேசங்களில் அபிவிருத்தி சம்பந்தமான கருத்துகள் மற்றும் முன்னுரிமை பற்றி கலந்துரையாடி பொது மக்களும் அரசாங்கமும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயலாற்றுவதற்கு வாய்ப்பினை உருவாக்கும் களமொன்றாக “கிராம இராஜ்ய எண்ணக்கருவை” நடைமுறைப்படுத்துவதற்கு நாம் கவனம் செலுத்துவோம்.

கடந்த காலங்களில் விவசாயிக்கு கிடைத்த உரங்களை இல்லாமல் செய்து விவசாயம் அழிந்த ஒரு காலம் இருந்தது. இன்றும் விவசாயியை வாழ வைப்பதற்குப் பதிலாக, விவசாயியை அழித்தொழிக்கும் கொள்கையையே தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

11 வருட 22 பருவ ஆய்வின் பின்னர், பத்தலேகொட விவசாய ஆராய்ச்சி நிறுவனம் இரசாயன மற்றும் சேதன உரங்களின் கலவையிலிருந்து சிறந்த நெல் விளைச்சலைப் பெற முடியும் என்று கண்டறிந்துள்ளது. இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தினால், அறுவடை 21% முதல் 31% வரை குறைய வாய்ப்புள்ளதாக ஆட்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை பொருட்படுத்தாமல் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இரசாயன உரங்களை தடை செய்து இயற்கை விவசாயத்தை ஒரே தடவையில் மேற்கொண்டதால் விவசாயம் வீழ்ச்சியடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயம் அழிந்துவிட்ட இந்நேரத்தில், இந்த விவசாயத்தை கட்டியெழுப்ப மாற்று அணியினர் கூறிக் கொள்ளும் தரப்பினரிடமும் எந்த திட்டங்களும் இல்லை. தற்போதுள்ள நிலத்தை திறம்பட பயன்படுத்துவதன் மூலமும், புதிய விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும் அதிக உற்பத்தியை அடைய முடியும்.

கல்வியைப் போலவே விவசாயமும் ஸ்மார்ட்டாக மாற வேண்டும். எப்போதும் பின்பற்றப்படும் பழமைவாத முறைகளுக்கு அடிமையாகாமல், நாட்டின் விவசாய விளைபொருட்கள் தேசிய உணவுத் தேவைக்கு மட்டுமின்றி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்றுமதி விவசாயத்திற்கும் வழிவகுக்கும் விதமாக மேம்பட வேண்டும். இதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். பல்வேறு டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக சந்தைக்கு செல்லும் முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment