சுதந்திரக் கட்சியின் தலைமையக கதவை மூடியது பொலிஸார் அல்ல, கட்டடத்தின் பாதுகாப்பை மட்டுமே நாம் மேற்கொள்கிறோம் - நிஹால் தல்துவ - News View

About Us

About Us

Breaking

Monday, April 8, 2024

சுதந்திரக் கட்சியின் தலைமையக கதவை மூடியது பொலிஸார் அல்ல, கட்டடத்தின் பாதுகாப்பை மட்டுமே நாம் மேற்கொள்கிறோம் - நிஹால் தல்துவ

கொழும்பு 10, டி.பி. ஜாயா வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் கதவை மூடியது பொலிஸார் அல்லவென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கட்சியின் சிலரே அங்குவந்து கதவை மூடி சாவியை எடுத்துச் சென்றார்களென்றும் பொலிஸார் அங்கு மோதல்கள் இடம்பெறுவதை தடுக்கும் வகையிலேயே அந்த தலைமையக கட்டடத்திற்கு பாதுகாப்பை மாத்திரம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு இருந்த முக்கியமான ஆவணங்கள் சில காணாமற்போயுள்ளதாக அந்தக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால எம்.பி. மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த வகையில், அங்கு இடம்பெற்றுள்ளது திருட்டா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸாரை வரவழைக்க வேண்டியுள்ளதாகவும் எனினும் கட்டடத்தை திறக்கும் வரை பொலிஸார் அதற்காக காத்திருப்பதாகவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அந்த கட்டடத்தின் கதவை பலவந்தமாக திறக்க வேண்டிய அவசியம் பொலிஸாருக்கு கிடையாதென்றும் அந்தக் கட்சியின் இரு தரப்பினருக்கிடையில் காணப்படும் மோதலே இந்த நிலைக்கு காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் மட்டுமே பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வர். அந்த வகையில் மோதல்கள் இடம்பெறுமானால் அதனைத் தடுத்து பாதுகாப்பு வழங்குவதையே பொலிஸார் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் கதவு மூடியுள்ளதை நாம் 06 ஆம் திகதி காலை 9.30 மணிக்ேக கேள்விப்பட்டோம்.

மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் அங்கு வந்து கூட்டம் நடத்த வேண்டுமென கூறி அதற்காக கட்டடத்தை திறந்து தருமாறு கோரியபோதே கதவு மூடியுள்ளதை காணமுடிந்தது. எனினும் அவர்கள் பொலிஸார் அதற்கு அனுமதி வழங்கவில்லையென்று தெரிவித்துள்ளனர்.

அந்த சமயம் தலைமையகத்தின் முன்னால் கூடிய அவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் அச்சமயம் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால, தஹம் சிறிசேன ஆகியோர் உள்ளிட்ட தரப்பினர் அங்கு வந்ததுடன் இரு தரப்பினருக்குமிடையில் வாய்த்தர்க்கங்கள் இடம்பெற்றன. 

பின்னர் அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த துஷ்மந்த மித்ரபால கட்சியின் முக்கியமான ஆவணங்கள் காணாமற் போயுள்ளதாகவும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிப்போரின் தேவைக்காக கட்சியை சிதைப்பதற்கு இடமளிக்க முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இனந்தெரியாத குழுவொன்று கட்சியின் தலைமையகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் தாம் மருதானை பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரென்ற வகையில் கட்சியின் எந்தவொரு சொத்தையும் அழிக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாதென்றும் ஆவணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் பொறுப்பு கட்சியின் பொருளாளர் என்ற வகையில் தமக்கே உள்ளதாகவும் அவ்வாறிருக்கும்போது ஆவணங்களை அழிக்குமளவுக்கு தமக்கு மனநிலை பாதிக்கப்படவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சொத்துக்களை பராமரிப்பதற்காக நிதியை ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தமது அனுமதியின் கீழேயே இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அவர், தலைமையகத்தை பாதுகாப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment