இளைஞர்கள் கோரும் மாற்றத்தை வழங்க நாட்டில் புதிய பொருளாதாரம் உருவாக்கப்படுகிறது - ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Monday, April 8, 2024

இளைஞர்கள் கோரும் மாற்றத்தை வழங்க நாட்டில் புதிய பொருளாதாரம் உருவாக்கப்படுகிறது - ஜனாதிபதி

நாட்டை விரைவான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு இளைஞர்கள் கோரும் மாற்றத்தை வழங்கி நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பான அடிப்படை சட்டங்கள் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஜூன் மாதம் நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (07) இடம்பெற்ற “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “நாட்டை விரைவான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாவிட்டால், நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைப்பதா, முன்னோக்கி கொண்டு செல்வதா அல்லது வீழ்ச்சியடைய வைப்பதா என்பதை இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் நிராகரிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். அனைவருக்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நிதி திறன் இல்லை. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வேலைத் திட்டம் குறித்து இளைஞர்கள் திருப்தி அடையவில்லை. மாற்றத்தை கோருகிறார்கள். அந்த மாற்றத்தை வழங்குவதற்காக நாட்டில் புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதற்குத் தேவையான அடிப்படை சட்டங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் நிறைவேற்றப்படும். பொருளாதாரத்தை மாற்ற, நாட்டின் சட்ட முறைமையும் மாற வேண்டும்.

நாட்டை விரைவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதற்கு அனைத்து அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் ஒத்துழைப்பும் தேவை. அவ்வாறு செய்ய முடியாவிட்டால், நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்ற வேண்டும்.

மேலும், கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது. ஒவ்வொரு வளர்ந்த நாடும் கிராமப்புற விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. எனவேதான் நவீன விவசாயத்தை கிராமத்துக்கு கொண்டு செல்ல விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.

அப்படியானால், இளைஞர்களாகிய நீங்கள் மாற்றத்துடன் முன்னேறுவதா அல்லது ஒரே இடத்தில் தேக்க நிலையில் இருப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பொறுப்பேற்றபோது, இளைஞர்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தெரிவித்தார். “நீங்கள் செய்யத் தயாராக இருந்தால், தேவையான வழிகாட்டுதலைத் தருகிறேன்” என்றார்.

அதன்படி இளைஞர்களான நாம் தேர்தலில் போட்டியிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றோம். அதன் பின்னர் அவர் மகாவலி வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். 30 வருடங்கள் என்று கூறப்பட்ட மகாவலி வேலைத்திட்டம் 10 வருடங்களில் நிறைவு பெற்றது.

மேலும் நாட்டுக்குத் தேவையான மின்சாரம் வழங்கப்பட்டது. ஜே.ஆர் ஜயவர்தனவின் காலத்தில் இரண்டு வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ஜனாதிபதி ஆர். பிரேமதாச நாடு முழுவதும் 200 ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்து கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தினார்.

நாம் அன்று இளைஞர்களாக இந்தத் திட்டங்களைக் கோரினோம். இளைஞர்களாகிய நீங்கள் இன்று அதற்குத்தயாரானால் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்வோம். புதிய பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பொருளாதார மறுசீரமைப்புச் சட்ட மூலத்தைக் கொண்டு வந்து அந்தத் திட்டத்தைத் தொடங்குவோம். மேலும், அரசாங்கத்தின் நிதியை நிர்வாகம் செய்ய புதிய நிதி சட்டமூலத்தை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பெண்களாக இருந்தாலும், தொழில் செய்யும் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. எனவே, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இரண்டு புதிய சட்ட மூலங்களைக் கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அதன் மூலம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம். அந்த மாற்றத்திற்காக எங்களுடன் இணைய உங்களை அழைக்கிறேன்.

பொய் சொல்லி உங்களை ஏமாற்ற எந்த தரப்பினருக்கும் நான் இடமளிக்க மாட்டேன். உங்கள் பிரச்சினைகள் எனக்குப் புரிகிறது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவே இந்தப் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இளைஞர்கள் எழுப்பிய சில கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி அளித்த பதில்களும் பின்வருமாறு:

கேள்வி:
ஜனாதிபதி அவர்களே, நாட்டில் பல்வேறு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. மேலும், அண்மையில் நிறுவப்பட்ட ஜனசபை ஒரு நல்ல திட்டமாகும். இப்போது ஜனசபை அமைப்பது மெதுவாகவே நடைபெறுகிறது.

பதில்:
ஜனசபா ஒரு நல்ல திட்டம். இதுவரை, ஒரு சில சபைகள் பரீட்சார்த்த அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.

ஜனசபைகளை சட்டப்பூர்வமாக்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.

உறுப்பினர்கள் தெரிவு போன்ற பல சிக்கல்கள் உள்ளன. உள்ளூராட்சி மன்றங்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்த்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்த வருடம் முடியாவிட்டால் அடுத்த வருடம் மீண்டும் ஜனசபையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:
அஸ்வெசும நிவாரணங்களை வழங்குவதில் குறைபாடுகள் உள்ளன. அனைத்து ஏழை குடும்பங்களும் இதன்பயன் கிடைக்கவேண்டும்.

பதில்:
அந்த குறைபாடுகளை போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக இந்த நன்மையை வழங்குவதற்கு சில தகுதிகள் அவசியம். இந்த திட்டம் 2025இல் டிஜிட்டல்மயப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 இலட்சம் போருக்கு இந்த பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அனைத்து ஏழை மக்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக அஸ்வெசும திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கேள்வி:
இந்நாட்டில் வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்போது நல்ல நிலையில் உள்ளது. சுற்றுலாத்துறையின் பலன்களை சிறுதொழில் முயற்சியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான திட்டம் உள்ளதா .

பதில்:
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் மோசமான பொருளாதார நிலை காரணமாக, எமது சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்தது. ஆனால் தற்போது மீண்டும் நம் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த புதிய புத்துணர்ச்சி மூலம், சிறுதொழில் முனைவோருக்கு சலுகைகளை வழங்க திட்டமிட்டு வருகிறோம். மேலும், இந்த நாட்டில் சுற்றுலாத் துறையை விரைவான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ஒவ்வொரு மாகாணத்திலும் சுற்றுலாவை மேம்படுத்த ஒரு குழுவை நியமிக்க எதிர்பார்த்துள்ளோம்.

கேள்வி:
தொழில் பயிற்சி நிறைவு செய்த இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. தொழிற்பயிற்சியை நிறைவு செய்யும் பயிற்சியாளர்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்புகிறேன்.

பதில்:
பொருளாதார நெருக்கடியால் சிலர் வேலை இழந்துள்ளனர். தற்போது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வருகிறது. குறிப்பாக நாட்டில் முதலீட்டு வாய்ப்புகள் விரிவடைவதால், பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.”என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச, ஐக்கிய லக்வனித முன்னணியின் தலைவி சாந்தினி கொங்கஹகே உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment