எந்த அரசாங்கத்தாலும் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, March 28, 2024

எந்த அரசாங்கத்தாலும் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் - பந்துல குணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எந்த அரசாங்கத்தாலும்  நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கடன் மறுசீரமைப்பு வெற்றி பெற்றால் மாத்திரமே  இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு – கொஹூவல மேம்பாலம் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் வெளிநாடுகளில் கடன் பெற்றே அரச நிர்வாகத்தை முன்னெடுத்தன.

பெற்றுக் கொண்ட கடன்களை மீள் செலுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டவுடன் அபிவிருத்தி பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்கள் கடன் வழங்கலை இடைநிறுத்தின. இதனால் அபிவிருத்தி பணிகளும் ஸ்தம்பிதமடைந்தன.

அரசமுறை கடன்களை மறுசீரமைப்பதற்கு தீர்மானமிக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேசிய ஒப்பந்தகாரர்கள் அவர்களின் நிதியை கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததும் தேசிய ஒப்பந்தக்காரர்களுக்குரிய நிதி முழுமையாக செலுத்தப்படும்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எந்த அரசாங்கத்தாலும் நாட்டை நிர்வகிக்க  முடியாது. இதுவே உண்மை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கடன் மறுசீரமைப்பு வெற்றி பெற்றால் மாத்திரமே அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment