ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில் இணையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தி குழு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 17, 2024

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில் இணையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தி குழு

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய தேசிய கட்சியை தலைமைத்துவமாக கொண்டு உருவாக்கப்படும் தேர்தல் கூட்டணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய அநுர பிரிதயதர்ஷன யாபா தலைமையிலான குழு இணைவதற்கு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மே தினத்தில் இந்த கூட்டணி அறிவிக்கப்படவுள்ளதுடன், கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் என்பவற்றை தேர்தல் செயலாற்றுகை குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் அமைச்சரவை கூட்டத்தில், உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய செயலாற்றுகை குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்திருந்தார்.

இந்த குழுவில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நிமல் லான்சா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டனர்.

இதனை தவிர ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரசாங்க தகவல் தினைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோரையும் தேர்தல் செயலாற்றுகை குழுவில் ஜனாதிபதி உள்ளடக்கினார்.

இந்த குழுவானது உத்தேச தேர்தலை கவனத்தில் கொண்டு பிரசாரம் மற்றும் கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறானதொரு நிலையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரவி கருணாநாயக்க தலைமையிலான குழு தேர்தல் கூட்டணியை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக செயற்பட்டு பல அரசியல் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது.

ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருந்த அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் லான்சா தலைமையிலான குழுவுக்கும் ஐக்கிய தேசிய கட்சி தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளது.

இதேவேளை தேர்தல் செயலாற்றுகை குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தேர்தல் கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பிலும் இரு தரப்புக்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சின்னம் மற்றும் கூட்டணியின் பெயர் தொடர்பில் தேர்தல் செயலாற்றுகை குழுவின் உறுப்பினரான அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக, ஜனாதிபதி ரணிலிடம் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment