உணவுக்காக நின்ற மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கி சூடு : 112 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2024

உணவுக்காக நின்ற மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கி சூடு : 112 பேர் பலி

காசா நகரில் உணவு உள்ளிட்ட உதவி பொருட்களை வாங்குவதற்காக திரண்ட மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 112 பேர் உயிரிழந்ததாகவும், 750 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் கழுதை வண்டியில் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும் இந்த சம்பவத்தை இஸ்ரேல் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காசாவில் காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்றும், கூட்ட நெரிசலே உயிரிழப்புக்கு காரணம் என்றும் இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன சுகாதார அமைச்சகம் இது ஒரு படுகொலை என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

நேற்றையதினம் (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து, இஸ்ரேல் மீதான சர்வதேசத்தின் கண்டனம் தீவிரமடைந்துள்ளது.​

இந்த சம்பவத்தை ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், பொதுமக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வௌிவிவகார கொள்கைகளுக்கான தலைவர் உள்ளிட்டவர்கள் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளதுடன், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 

இந்த போரில் காஸாவில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதுடன், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment