பொதுச் சுகாதார பரிசோதகர் மரணம் : வீட்டிற்குள் நுழைந்த இருவர் சுட்டுவிட்டு தப்பியோட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 26, 2024

பொதுச் சுகாதார பரிசோதகர் மரணம் : வீட்டிற்குள் நுழைந்த இருவர் சுட்டுவிட்டு தப்பியோட்டம்

கரந்தெனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் இன்று (26) காலை அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

எல்பிட்டி, குருந்துகஹஹெதப்ம பிரதேசத்தில் வசிக்கும், கரந்தெனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றும் 51 வயதான டபிள்யூ.டி. ரொஷான் புஷ்பகுமார என்பவராவார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரை இன்று (26) காலை 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்பிட்டி, குருந்துகஹஹெதப்ம, திவிதுருகமவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பணி நிமித்தமாக வந்துள்ளதாகக் கூறி வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி ஆசிரியை என்பதுடன், அவர் எல்பிட்டி எல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அதிகாலையில் சென்றுள்ளார். 

உயிரிழந்த ரொஷான், அவரது தாயார் மற்றும் அவரது இளைய மகன் சிறிய மகன் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

அவரது இளைய மகன் இன்று புனித தெரேசா கல்லூரியின் முதலாம் தரத்தில் பாடசாலையில் சேர்ப்பதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்தபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளராக செயற்பட்டு வருகின்றார்.

படுகொலை செய்யப்பட்ட ரொஷான் குமார, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்குகளை நடத்துவதில் மிக முக்கிய பங்காற்றுபவர் என, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் சந்தேகநபர்களை கைது செய்ய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment