தமிழ் மக்களின் இருப்பை அழித்ததே கருணாதான். அவர்தான் பாதுகாக்கப்போகிறார் என்று அவரை தமிழ் மக்கள் நம்பினால் கடவுளாலும் தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டவர்களை இன்று வெள்ளிக்கிழமை (19) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த மாவீரர் வாரத்தில் கைது செய்யப்பட்ட மிஞ்சிய அரசியல் கைதிகள் மற்றும் சிறையில் இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர், அவரது மகன், ஜனநாயக போராளி அமைப்பின் உப தலைவர் நகுலேஸ் ஆகியோரை சந்தித்தேன்.
நகுலேஸின் வழக்கு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் சார்ந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த வகையில் அடுத்து வழக்கு தவனைக்கு முன்னர் பிணையில் விடுவிப்பது தொடர்பாக வெளிப்படுத்தப்படும். அதேவேளை எமது கட்சி மாவட்ட அமைப்பாளர், அவரது மகன் தனுஜன் ஆகியோரை கடந்த வாரம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை செய்து, அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோதமாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியாத விடயங்கள் அந்த பி அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த சட்டத்தின் கீழ் குற்றங்களாக கருத முடியாத காரணங்களை கொண்டு அந்த வழக்குகளை தொடர முடியாது. அவ்வாறான நிலையில் இரண்டு மாதங்களாக அவர்களை சிறைச்சாலையில் அடைத்து வைத்திருப்பது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல்.
அது மட்டுமல்ல, அரசின் உண்மையான இனவாத நிகழ்ச்சி நிரலை இரட்டை வேடம் காட்டி, நினைவு கூரலாம் என உலகத்துக்கு சொல்லிக்கொண்டு, நல்லவர்கள் போல் நடித்து, மறுபக்கம் நினைவு கூரியவர்களை கைது செய்து அவர்களை பழிவாங்கும் கோணத்தில் செயற்படுவதை உலகத்துக்கு தெரியப்படுத்துவோம்.
அதேவேளை அரசின் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த விடயங்களை வருகின்ற மார்ச் மாதம் இடம்பெறும் மனித உரிமை பேரவையில் அம்பலப்படுத்தி, அதனை நேரடியாக பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.
ரணில் விக்கிரமசிங்கவின் கடைசிக் கனவு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக தான் வர வேண்டும் என்பதே. அந்த கனவு சாத்தியமற்றது. ஏனென்றால், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்குகள் மூன்றாக பிரியும். அதனால் ரணிலுக்கு வாக்குகள் குறையும். அவர் தனி நபராக ஜக்கிய தேசிய கட்சியினுடைய ஒருவராக இருந்தால் சிலவேளை அவருக்கு வாக்குகள் விழக்கூடிய வாய்ப்பிருக்கலாம்.
ஆனால் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் சிங்கள மக்கள் விரும்பி வாக்களித்த கோட்டாவை அதே மக்கள் துரத்தி வீட்டுக்கு அனுப்பியதன் பிறகு அந்த தரப்பை அரசியலில் உயிரோடு வைத்திருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க செய்கின்ற இந்த செயற்பாடுகளை தெற்கில் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ரணிலுக்கும் இது தெரியும்.
அவர் தேர்தலில் வெல்வதற்காக தமிழர்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அவசரம். அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்துக்கு விரைந்து சென்று, அவர் கூறிய கருத்துக்கள் அடுத்த தேர்தலுக்குப் பின்னர் செய்யவிருப்பதாகும். தேர்தலுக்கு முன்னரே செய்யக்கூடியதை அவர் சொல்லமாட்டார். அரசியல் கைதிகள் அவரின் கையெழுத்தில் விடுவிக்கப்படலாம். ஆனால், அவர் அதை செய்யமாட்டார்.
இனி இந்த விளையாட்டுக்களுக்கு தமிழ் மக்கள் இடமளிக்கப் போவதில்லை. தமிழ் மக்களை, தமிழ் தலைவர்களே 'ரணில் நல்லவர், அவர் வந்தால் எல்லாம் செய்வார்' எனக்கூறி ஏமாற்றி வைத்துள்ளனர். ரணில் ஜனாதிபதியான பின்னர், தனது உண்மையான முகத்தை ரணிலே காட்டிவிட்டார்.
கிழக்கில் திருகோணமலை நகரில் வாழ்கின்ற 90 வீதமான தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டமே மெகா சிற்றி என்ற திட்டம். இது ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் திருகோணமலை தமிழருடைய கையில் இருந்து பறிபோயுள்ளது.
இந்த இரண்டரை வருடத்தில் ரணில், கோட்டாவை விட மிக மோசமாக ஜனநாயகத்தை மறுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என்றார்.
No comments:
Post a Comment