"பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் பேச தயங்குவது ஏன்?" என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டியில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறியது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கமோ, முதலாளிமார் சம்மேளனமோ அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. அதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் பேச தயங்குவது ஏன்?
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட்க்கூலி ரூபா 1000 ஆகவே உள்ளது. ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு கிட்டிய காலம் எவ்வித அதிகரிப்பும் செய்யப்படவில்லை. சம்பள சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒரு நிலைப்பாடு இல்லாமல் மாறிமாறி வேறு வேறு விடையங்களை கூறி வருகின்றனர்.
ஒரு நேரத்தில் சம்பள சபை சரிவராது, கூட்டு ஒப்பந்தம் செய்யப்போகின்றோம் என்கின்றனர். இன்னொரு நேரத்தில் போர்ம்யூலா முறை கொண்டுவரப்போகின்றோம் என்கின்றனர். இன்னொரு நேரத்தில் சம்பளம் அதிகரிக்க வேண்டும், இல்லாவிட்டால் கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களை பறிக்க வேண்டும் என்கின்றனர். எவ்வாறாயினும் தீர்வு ஏதும் இல்லை. காலம் இழுத்தடிப்பு செய்வது மட்டுமே நடைபெற்று வருகின்றது. இது அரசுடன், முதலாளிமாருடன் சேர்ந்த கூட்டு நாடகமாகவே தெரிகின்றது.
இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மெளனமாக உள்ளனர். முதலாளிமார் சம்மேளனம் நேரடியாகவே சம்பள அதிகரிப்பு செய்ய முடியாது என தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாது வருமான பங்கீட்டு முறையென்ற இன்னொரு விடயத்தை தெரிவிக்கின்றனர். இவ்வாறு காலம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு, மக்கள் மீது சுமைக்கு மேல் சுமை சுமத்தப்பட்டு வருகின்றது.
தொழிற்சங்க தலைவர்கள் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் என கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, மகிழ்ந்து வருகின்றனர். புகழாரம் பேசுகின்றனர். சிலர் தான் இருக்கும் இடம் எதுவென தெரியாது, யாருடைய பலத்தால் இந்த பதவிகள் கிடைத்திருக்கின்றதென தெரியாது, சர்வதேச தலைவர் என்றெல்லாம் செய்தி வெளியிட்டுக்கொள்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினை மூடி மறைக்கப்படுகிறது. தீர்வில்லாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment