இன்று முதல் மூடப்படும் மஹவ, அநுராதபுரம் வரையான ரயில் பாதை : அந்நிய செலாவணியை ஈட்டும் புதிய இலக்கை நோக்கி ரயில்வே திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 7, 2024

இன்று முதல் மூடப்படும் மஹவ, அநுராதபுரம் வரையான ரயில் பாதை : அந்நிய செலாவணியை ஈட்டும் புதிய இலக்கை நோக்கி ரயில்வே திணைக்களம்

மஹவ முதல் அநுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதை முழுமையான புனரமைப்புக்காக இன்று (07) முதல் மூடப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன யாழ். நகரில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, யாழ். ரயில் நிலையத்துக்கு விசேட கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டில், ரயில்வே திணைக்களம் வடக்கு ரயில்வேக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து, பெரும் முதலீட்டை மேற்கொண்டது.

இதன் கீழ் அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான ரயில் பாதை மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் ஆரம்பிக்கப்படும் மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலான ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இன்று முதல் மூடப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பாரிய செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் நிறைவடைந்த பின்னர், பொருட்கள் மற்றும் பயணிகள் மற்றும் சுற்றுலா செலவுகளை பிரதிபலிக்கும் விலைக் கொள்கையின் கீழ் கட்டண முறையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சரக்கு போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்தல், கோதுமை மா போக்குவரத்து, சுற்றுலா வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற அந்நிய செலாவணியை ஈட்டும் புதிய வழிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்குவதற்கு ரயில்வே திணைக்களம் பங்களிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், யாழ். நிலைய அதிபர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார உட்பட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment