திருகோணமலை கடற்கரையில் சேர்ந்த வெளிநாட்டு குப்பைகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 10, 2024

திருகோணமலை கடற்கரையில் சேர்ந்த வெளிநாட்டு குப்பைகள்

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது கடற்படை மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்புகொண்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டு வருகின்றதுடன் அதற்கு உழவு இயந்திரங்கள் மற்றும் பெகோ இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.

பருவமழை காலங்களில் கடலுக்கு அடியில் ஓடும் நீரோட்டம் காரணமாக, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வரும் குப்பைகள், இலங்கைக் கடற்கரையில் வந்தடைவது கடந்த வருடங்களில் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட கடல்சார் சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஆர்.எச். மொஹீன் தெரிவித்தார்.

அவற்றுடன் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள லேபல்களில் அவை அந்தந்த நாடுகளின் குப்பைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
அத்துடன் வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளில் அவை வந்து சேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கை மக்களால் கடலில் விடுவிக்கப்படும் குப்பைகளும் இவ்வாறு வந்து சேர்வதாகவும் தெரிவித்தார்.

கடற்கரையில் சேரும் குப்பைகளில் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கொள்கலன்கள் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருடன் குறித்த இடங்களை பார்வையிட்டு குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு மாநகர சபை அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி கே. விஜயகுமார் தெரிவித்தார். 

இதற்கு மாநகர சபை அதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணிகளை திருகோணமலை மாவட்ட செயலாளர், மாநகர ஆணையாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment