உத்தியோகபூர்வமாக அறிவிப்பாரா ரணில் ? காலவகாசம் வழங்கியுள்ள பொதுஜன பெரமுன - News View

About Us

About Us

Breaking

Sunday, January 21, 2024

உத்தியோகபூர்வமாக அறிவிப்பாரா ரணில் ? காலவகாசம் வழங்கியுள்ள பொதுஜன பெரமுன

(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தேச 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதாயின் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். இதற்காக மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசத்தை வழங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிப்பட அறிவிக்காவிடின் தனித்து வேட்பாளரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் கட்சி மட்டத்தில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது அமெரிக்காவில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷ மெய்நிகர் வழியாக கட்சியின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றார்.

இறுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் இறுதியான அறிவிப்புக்கு மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்குமாறு பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எதிர்பார்ப்புடன் உள்ள தம்மிக்க பெரேரா தற்காலிகமாக பின்வாங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மறுபுறம் இருவருமே தேர்தலில் களமிறங்காவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும், இதன்போது ஷசிந்திர ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க உத்தேச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில் அந்த கட்சியின் நிறைவேற்று குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் ஜனாதிபதி ரணில் தான் போட்டியிடுவதை உறுதியாக தெரியப்படுத்தவில்லை. ஆகவேதான் ஜனாதிபதியின் அறிவிப்பு மார்ச் மாதம் இறுதிக்குள் கிடைக்காவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.

No comments:

Post a Comment