தொடர்ந்தும் ஒற்றுமையாக பயணிப்போம் : தோல்வியின் பின்னர் சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 21, 2024

தொடர்ந்தும் ஒற்றுமையாக பயணிப்போம் : தோல்வியின் பின்னர் சுமந்திரன்

புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், இந்த பயணத்திலே நாங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் 47 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்ற சிவஞானம் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றையதினம் தமிழரசுக் கட்சித் தலைவருக்கான தேர்தலிலே மிக ஆரோக்கியமாக, எமது கட்சி உட்கட்சி ஜனநாயகத்தினை நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் முன்மாதிரியாக நடத்திக் காட்டியிருக்கின்றது.

இதிலே வெற்றி பெற்ற சக வேட்பாளர் எனது நண்பன் சிறிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எங்களது முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா இத்தனை காலமும் வழிநடத்திய தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு தற்போது நண்பன் சிறிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் சந்தோசமான விடயம். இந்த பயணத்திலே நாங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம்.

இது நாங்கள் இருவரும் தேர்தல் காலத்திலேயே மக்களுக்குத் தெளிவாக சொல்லி வந்த விடயம் அப்படியாகவே தொடர்ந்து பயணிப்போம்.

எனது முழுமையான ஆதரவை தற்போது ஜனநாயக முறையிலே தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற தலைவருக்கு முழுமையாக வழங்குவேன் என்பதையும் இந்த வேளையிலே அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்"எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment