A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 3, 2024

A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்

தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், பொலன்னறுவை, வெலிக்கந்த, அரலகங்வில, திம்புலாகல கல்வி வலயங்களில் வசிக்கும் பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை (04) ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவித்தலை விடுத்துள்ள பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மன்னம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் இவ்வாறு விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பரீட்சை நிலையத்தில் திணைக்களத்தின் பரீட்சை அனுமதி அட்டை அனைத்து பாடங்களுக்கும் செல்லுபடியாகும் எனவும் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பரீட்சையின் நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருவதன் மூலம் அசௌகரியங்களை தவிர்க்குமாறும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, பரீட்சைக்கு செல்ல எவ்வித தடங்கலும் அற்ற பரீட்சார்த்திகள், தமக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட உரிய பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் திணைக்களத்ததின் அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தம் ஏற்படக்கூடிய அநுராதபுரம், கெக்கிராவ, பொலன்னறுவை, பசறை, அம்பாறை, மட்டக்களப்பு, ஹசலக்க பிரதேசங்களில் விசேட பரீட்சை நிலையங்களை அமைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment