உடப்பு ஆண்டிமுனை கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கரைவலை மீன் வாடியில் இனந்தெரியாத விசமிகளினால் நேற்று (19) நள்ளிரவு 12.00 மணிக்கு பிற்பாடு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு மீன் வாடியில் தொழிலாளிகள் இருந்து விட்டு சென்ற பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. அமரர்.சி.செல்வநாதனுக்கு சொந்தமான இந்தக் கரைவலை வாடியில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவத்தில், வள்ளம் 3, சாலை வலை 2, புறவலை 1, இயந்திரப்படகு 1, கரைவலை 1, மீன்பிடிக்கும் சல்வா 1, கம்மான் கயிறு 15 போன்றவை எரிந்து நாசமாகியுள்ளது. இதில் ஒரு வள்ளம் முற்றாகவே எரிந்ததோடு, இயந்திரப்படகு ஒன்று முற்றாகவே எரிந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட தமது சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக வாடி உரிமையாளரின் மகன் செ.சொக்கலிங்கசாமி குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக உடப்பு பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று (19) காலை உடப்பு பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.
உடப்பில் இடம்பெற்ற தீ வைக்கப்பட்ட சம்பவங்களில் இது நான்காவது கரைவலை வாடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடப்பு நிருபர்
No comments:
Post a Comment