(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்குள்ளான நிறைவேற்று குழுவை நீக்கி இடைக்கால குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்தமை வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த குழுவுக்கு நீதியமைச்சரின் மகன், ஆளுநர் ஒருவரின் மகன் நியமிக்கப்பட்டுள்ளமை முறையற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் உண்மை நோக்கததுடன் இடைக்கால குழுவை நியமித்தார். ஆனால் ஒரு தரப்பினர் இந்த இடைக்கால குழுவைக் கொண்டு பிறிதொரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகார சபையின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய சட்ட கட்டமைப்பை சட்டமூலம் ஊடாக அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி ஒன்றும் புதிதல்ல, காலம் காலமாக மோசடி இடம்பெறுகிறது. கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள் அரசியல்வாதிகளுக்கும், நிதிக்கும் அடிபணிந்து துறையின் அடிப்படை கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார்கள்.
கிரிக்கெட் சபையின் மோசடி மாபியாக்களினால் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச மட்ட போட்டிகளில் தோல்வியடைந்ததை தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியை பகிரங்கப்படுத்தியுள்ளார். பாராளுமன்றத்தின் ஊடாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் கோப் குழுவில் பலமுறை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கோப் குழுவுக்கு முன்னிலையாகுமாறு கிரிக்கெட் சபைக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டபோதும் 'கோப் குழுவுக்கு முன்னிலையாகும் பொறுப்பு தமக்கு இல்லை' என கிரிக்கெட் சபையின் நிறைவேற்று குழுவினர் தட்டிக்கழித்தன். அதன் பின்னர் சட்ட விளக்கம் வழங்கியதன் பின்னரே அவர்கள் கோப் குழுவுக்கு முன்னிலையாகினர்.
கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் கோப் குழு பல பரிந்துரைகளை முன்வைத்தது. ஆனால் அவை செயற்படுத்தவில்லை.
துரதிஷ்டவசமாக ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. கோப் குழு கலைக்கப்பட்டது. நாட்டில் குடும்ப ஆட்சி நிலவுவதை போன்று கிரிக்கெட் சபையிலும் குடும்ப நிர்வாகம் இடம்பெறுகிறது. சுமதிபால குடும்பம், தர்மதாஸ குடும்பம், ரணதுங்க குடும்பம் ஆகியோரே கிரிக்கெட் சபையை நிர்வகித்தார்கள்.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்குள்ளான நிறைவேற்று குழுவை நீக்கி இடைக்கால குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்தமை வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த குழுவுக்கு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன், ஆளுநர் ஒருவரின் மகன் நியமிக்கப்பட்டுள்ளமை முறையற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் உண்மை நோக்கததுடன் இடைக்கால குழுவை நியமித்தார். ஆனால் ஒரு தரப்பினர் இந்த இடைக்கால குழுவை கொண்டு பிறிதொரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.
No comments:
Post a Comment