இலங்கை கிரிக்கெட் சபையில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன : நீதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர வேண்டும் என்கிறார் லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Thursday, November 9, 2023

இலங்கை கிரிக்கெட் சபையில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன : நீதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர வேண்டும் என்கிறார் லக்ஷ்மன் கிரியெல்ல

(எம்.ஆர்,எம், வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை கிரிக்கெட் சபையை ஊழல் மோசடியில் இருந்து பாதுகாக்க கிரிக்கெட் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை காரணமாக கிரிக்கெட் சபையில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. அதனால் இந்த தீப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகார சபையின் தலைவர் உட்பட நிர்வாக சபை தலைவர் உட்பட நிர்வாக சபைையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அமைச்சு சார் விடயங்களை ஆராய இடைக்கால குழு அமைப்பதற்கு அமைச்சருக்கு பூரண அதிகாரம் இருக்கிறது. அதன் பிரகாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் ராெஷான் ரணசிங்க கிரிக்கெட் நிர்வாகத்தை நீக்கி, இடைக்கால குழுவொன்றை அமைத்தது சட்ட ரீதியானது. அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறது.

அதன் பிரகாரம் பதவி நீக்கப்பட்டவரகள் நீதிமன்றம் சென்றபோது நீதிமன்றம் இது தொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரை அழைத்து விளக்கம் கோரி இருக்க வேண்டும். அதனை நீதிமன்றம் செய்யவில்லை.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாகவும் அதன் ஊழல் மோசடிகள் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்று இடம்பெற்றது. அதில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வந்தது கிரிக்கெட் சபையில் இருக்கும் ஊழலை இல்லாமலாக்க வேண்டும் என்பதாகும்.

அதனால் பாராளுமன்ற விவாதம் தொடர்பாக நீதிமன்றம் தெரிந்திருக்க வேண்டும். நீதிமன்றம் இது தொடர்பில் உணர்ந்திருந்தால் நீதிமன்றம் கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை விதித்திருக்காது.

அத்துடன் நீதிமன்றம் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளமையை பயன்படுத்திக் கொண்டு கிரிக்கெட் சபையில் இருப்பவர்கள் தற்போது பாரியளவில் பொருட்களை அங்கிருந்து அகற்றி வருவதாக எமக்கு தகவல் கிடைக்கிறது. அதேபோன்று வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் மீளப் பெறுவதாக எமக்கு தகவல் கிடைக்கிறது.

இந்த நிலைக்கு யார் காரணம். கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்கறிக்கைக்கு அமையவே இடைக்கால குழுவொன்றை அமைச்சர் அமைத்தார்.

அத்துடன் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு காரணமாகவே இன்று இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தின் கோப்புகள மற்றும் வங்கிகளில் இருக்கும் பணம் அகற்றும் நடவடிக்கை இடம்பெறுகிறது.

அதனால் மேன்முறையீட்டு நீதிபதியின் இந்த தீர்ப்பு தொடர்பாக அவருக்கு எதிராக இந்த பாராளுமன்றம் குற்றப்பிரேரணை ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் இந்த நீதிபதிகளின் உறவு மற்றும் நட்பு தொடர்பான விடயங்கள் இந்த சபையில் வெளிப்படுத்தப்பட்டன.

அத்துடன் இலங்கையில் 12 கிரிக்கெட் சங்கங்களே கிரிக்கெட் விளையாடுகின்றன. ஆனால் கிரிக்கெட் சபைக்கு நிர்வாகிகளை தெரிவு செய்ய 142 சங்கங்கள் வாக்களிக்கின்றன. இதில் அதிகமான சங்கங்கள் நிர்வாக தெரிவுக்கு வாக்களிப்புக்காக மாத்திரம் பதிவு செய்துகொண்டிருக்கின்றன. அதனால் இந்த சங்கங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவை அனைத்துக்கும் அப்பால் கிரிக்கெட் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் . அத்துடன் இலங்கை கிரிக்கெட் சபை ஊழல் மோசடிமிக்கது என முழு இலங்கைக்கும் தெரியும். அதனால் நீதிமன்றத்துக்கு இது தெரியாது என தெரிவிக்க முடியாது.

மோசடி அதிகாரிகளை பதவி நீக்கியதால் அந்த அதிகாரிகளே நீதிமன்றம் சென்றுள்ளனர். அப்படி இருக்கும்போது நீதிமன்றம் விளையாடடுத்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக விளக்கம் கோராமல் இடைக்கால தடை போடுவதற்கு நீதிமன்றக்கு இருக்கும் அவசரம் என்ன என கேட்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment