இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் : விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Thursday, November 9, 2023

இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் : விமல் வீரவன்ச

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் உள்ளது. கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க நிதியில்லை ஆனால் கிரிக்கெட் சபையின் ஆலோசகராக பதவி வகிக்கும் மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்க முடியுமா? என தேசிய சுதந்திர முன்னையின் தலைவரும் சுயாதீன எதிரணியின் உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகார சபையின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய சட்ட கட்டமைப்பை சட்டமூலம் ஊடாக அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஐ.சி.சி.யின் தலைவர் தனியார் விமானத்தில் வருகை தந்து, ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பிரதானி சாகல ரத்னாயக்கவை சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கை கிரிக்கெட் சபைக்கு உள்ள அநாவசிய அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார் என எமக்கு தெரியவந்துள்ளது. அவரைப் பொறுத்தவரை இலங்கை கிரிக்கெட் சபையை பாதுகாக்க வேண்டும்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற சிறிது காலத்திற்கு முன்னர் எதற்காக எல்.பி.எல். போட்டியை நடத்த வேண்டும் இதனால்தான் சிறந்த வீரர்கள் காயமடைந்தார்கள். உலகக் கிண்ண தொடரிலும் இவர்களால் விளையாட முடியாமல் போனது.

ஐ.சி.சி.யின் தலைவர்தான் எல்.பி.எல். போட்டியை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற சிறிது காலத்திற்கு முன்பாக நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு பணித்தாரோ தெரியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எனவே இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இலாபம் பெறும் நோக்கத்தில் கிரிக்கெட் சபை உருவாக்கப்படவில்லை.

பாடசாலை கிரிக்கெட் அணிகளை தேசிய மட்டத்தில் கொண்டு செல்ல வேண்டும். திறமையான கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் கிரிக்கெட் சபை செயற்படுகிறது.

கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு வேண்டிய வசதிகளை பெற்றுக் கொடுப்பற்கு போதிய நிதியில்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் சபையின் ஆலோசகராக தெரிவு செய்யப்பட்ட மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கப்படுகிறது. நான் நினைத்தேன் இவர் சேவை அடிப்படையில்தான் ஆலோசனை வழங்குகிறார் என்று நான் நினைத்தேன். இந்த விடயம் பற்றி அவர் ஏதும் குறிப்பிட்டால் நான் பல விடயங்களை வெளிப்படுத்துவேன் என்றார்.

No comments:

Post a Comment