தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் : வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுபடுத்தவில்லை - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Monday, November 13, 2023

தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் : வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுபடுத்தவில்லை - ஹர்ஷ டி சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுபடுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.

2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாக வெளிப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இதனை பிரதான குறைபாடாக கருத வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தவில்லை. மறுபுறம் சமூக பாதுகாப்பு அறவீட்டுத் தொகைக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச வருமானத்துக்கும் அரச செலவினத்துக்கும் இடையில் காணப்படும் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யும் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவோம் என்றார்.

No comments:

Post a Comment