நாட்டில் நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் : மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 16, 2023

நாட்டில் நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் : மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

நாட்டில் பல்கலைக்கழக மட்டத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை சனத் தொகையில் ஒட்டு மொத்தமாக 15 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி சுகுணன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பிரிவினரால் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடாத்திய பாரிய குருதி பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்ட தொற்று நோய் தடுப்பு அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பரிசோதனை முகாமில் வைத்தியர் ஜி.குணன் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், "இலங்கை மக்களின் 15 வீதமானோர் குறித்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒரு மில்லியன் பேரை எடுத்துக் கொண்டால் அதில் அரைவாசி பேர் தங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் அறிந்து கொள்கிறார்கள். ஏனைய அரைவாசி பேரும் பரிசோதனை எதுவுமின்றி நோயினை கண்டுபிடிக்காமல் குறித்த நோயை தாங்கிக் கொண்டு நோயாளிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

ஆகவே, தங்களுடைய உடம்பில் நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதற்காகவே இப்போது நாம் இந்த இடத்தில் இரத்த பரிசோதனை முகாமை நடத்தி வருகிறோம்.

நீரிழிவு நோயாளர்கள் அல்லது நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு பல்வேறு விதமான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதில் மிகப் பிரதானமானது மனதை சமச்சீராக வைத்துக் கொள்வது. மன அழுத்தத்திலிருந்து தம்மை பாதுகாத்து மிகவும் சமச்சீரான நிலையில் மனதை வைத்துக் கொள்கின்றபோதும் உடற்பயிற்சி செய்கின்றபோதும் சிறந்த உணவுப் பழக்கங்களை கையாளுகின்றபோதும் நிச்சயமாக நீரழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

வைத்தியர்கள், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சமூக பிரதிநிதிகள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மாநகர சபை, மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை சுகாதார திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் வைத்தியர்களும் தாதியர்களும் குருதி பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment