எதிர்வரும் 7ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு, ஹைட்பார்க் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவைக் கோரும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஏனைய கட்சிகளுடனும், அமைப்புக்களுடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பங்கு பற்றி முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் அல்லலுறும் பலஸ்தீனர்களின் விமோசனத்திற்காக அணிதிரளுமாறு நாட்டுமக்களுக்கு அவர் வேண்டுகோளொன்றையும் விடுத்துள்ளார்.
இதனை ஏற்பாடு செய்து வரும் "வீ ஆர் வன் "("We are One") என்ற அமைப்பின் தலைவர் சுரேன் சந்திரவுடன், உலமாக்கள் உட்பட கட்சியின் "தாருஸ் ஸலாம்"தலைமையகத்தில் புதன்கிழமை (1) மாலை தம்மைச் சந்தித்து கலந்துரையாடியவர்களிடம் அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஏனைய பல கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் இதில் பங்கெடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
முக்கியமாக, பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த மதப் பெரியார்கள் பலரும் இதற்கு ஒத்துழைக்க இணக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை தொலைபேசியில் தொடர்புகொண்ட, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அவரது வருகையை உறுதிப்படுத்தினார். அத்துடன், அது பற்றிய குறுந்தகவலொன்றையும் சஜித் உடனடியாகவே ஹக்கீமுக்கு இட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மத்திய குழுவின் தலைவர் அர்ஷாத் நிசாம்தீனுடன் அதன் உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு, இதற்கு ஒத்துழைப்பது பற்றிய பயனுள்ள கருத்துக்களையும் தலைவருடனும், வந்தவர்களுடனும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
No comments:
Post a Comment