அர்ஜுன ரணதுங்க குழுவை இடைநிறுத்திய உத்தரவை நீக்குமாறு மனு தாக்கல் : மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்ற விளையாட்டு அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Monday, November 13, 2023

அர்ஜுன ரணதுங்க குழுவை இடைநிறுத்திய உத்தரவை நீக்குமாறு மனு தாக்கல் : மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்ற விளையாட்டு அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொசான் ரணசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது சட்டத்தரணியான ஜீ.ஜீ. அருள்பிரகாசம் ஊடாக இந்த ஆட்சேபனை மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுவதாக தெரிவித்து, அதன் சபையை இடைநிறுத்தி விளையாட்டு அமைச்சரினால் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவொன்று நியமிக்க்பபட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது.

அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயற்பாடுகளையும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு ஒன்றை வழங்கியது.

குறித்த மனு கடந்த நவம்பர் மாதம் 07ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

குறித்த இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரியே விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment