(எம்.ஆர்,எம், வசீம், இராஜதுரை ஹஷான்)
இலங்கை கிரிக்கெட் சபையை ஊழல் மோசடியில் இருந்து பாதுகாக்க அழுத்தங்களுக்கு அடிபணியாமல் பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரும் முன்வர வேண்டும். அத்துடன் நிறைவேற்றுத்துறை, பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை ஒன்றிணைந்து செயற்பட்டால் ஊழல் மிக்க கிரிக்கெட் சபை நிர்வாகத்தை வீட்டுக்கு அனுப்பலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகார சபையின் தலைவர் உட்பட நிர்வாக சபை தலைவர் உட்பட நிர்வாக சபைையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கிரிக்கெட் விளையாட்டை இன, மத வேறுபாடு இன்றி அனைவரும் நேசித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் தற்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பலவீனமான நிலைக்கு சென்றுள்ளது.
இதற்கு பிரதானமான காரணம் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றுவரும் ஊழல் மோசடியாகும். கிரிக்கெட் சபையில் இருக்கும் மோசடிமிக்க, ஊழல்வாதிகளின் செயற்பாட்டினாலே கிரிக்கெட் விளையாட்டு கீழ் மட்டத்துக்கு சென்றிருக்கிறது.
அதனால் இந்த கிரிக்கெட் சபை நிர்வாகத்தை உடனடியாக நீக்க வேண்டும். அதேபோன்று கிரிக்கெட் சங்கங்களை நீக்க வேண்டும்.
அத்துடன் இந்த கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல் மோசடிக்காரர்கள். இவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையும் கையில் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது அரசியல் தலையீடு மேற்கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு முறையிட்டு அதனை தடுக்கின்றனர். அதனால் பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரும் ஒன்றிணைந்து இதன் உண்மைத்தன்மையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
அத்துடன் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுத்துறை அமைச்சு ஆலோசனைக்குழு கூட்டத்துக்கு இலங்கை கிரிக்கெட் சபை வரவில்லை. இவர்கள் பாராளுமன்றம், ஜனாதிபதியை விட உயர்ந்த நிலையில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறனர்.
இதனால் இவர்களுக்கு நாங்கள் சொல்வது. 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களின் போராட்டத்தின் மூலம் வீட்டுக்கு சென்றார். அதனால் கிரிக்கெட் சபையை விட்டுக்கு அனுப்புவது பெரிய விடயம் அல்ல.
மேலும் இலங்கை கிரிக்கெட் மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கிறது. நாங்கள் திருடர்களை பாதுகாக்க மாட்டோம். கிரிக்கெட் சபையினால் திருடப்பட்ட நிதியை மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம். கிரிக்கெட் சபையில் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு பாடசாலை கிரிக்கெட்டை விருத்தி செய்ய உபயோகிக்க வேண்டும்.
எனவே இன்று நாங்கள் கிரிக்கெட் சபை பதவி விலக வேண்டும் என பிரேரணை நிறைவேற்றினாலும் அவர்கள் பதவி விலகப்போவதில்லை. அதனால் இந்த கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை புரிந்துகொண்டு நிறைவேற்றுத்துறை, பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை ஒன்றிணைந்து நிபந்தனை இன்றி கிரிக்கெட் சபை நிர்வாகத்தை கலைத்துவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டால் இவர்களை வீட்டுக்கு அனுப்பலாம்.
அத்துடன் நீதிமன்றம் கிரிக்கெட் சபையின் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை விதித்து வழங்கிய தீர்ப்பு குறித்து எங்களுக்கு இணங்க முடியாது. நீதிமன்ற தீர்ப்பை நான் ஒருபோதும் விமர்சித்ததில்லை. நாட்டில் இருக்கும் நீதிபதிகளில் 99.9 வீதத்துக்கும் அதிகமானவர்கள் நல்லவர்கள். ஒருசிலர் தொடர்பாகவே எமக்கு விமர்சனம் இருக்கிறது.
அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் இடம்பெற்று வரும் பாரதூரமான ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு பணம் கொடுத்து ஏமாற்ற முடியாது என்பது எனது நம்பிக்கை. அதனால் அவர் தனது எதிர்கால அரசியலை யாருடன் இணைந்தும் மேற்கொள்ளும் உரிமை அவருக்கு இருக்கிறது.
என்றாலும் அவரது தூய்மை தன்மையை மதிக்கிறேன். அவர் எமது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர நாங்களும் அவரை அழக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment