மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது : வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் - ஹரீஸ் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Sunday, November 12, 2023

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது : வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் - ஹரீஸ் எம்.பி

நூருல் ஹுதா உமர்

மட்டக்களப்பு விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய தேரர் தமிழ் மக்களை துண்டுதுண்டாக வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று மிகக்கேவலமான முறையில், மிக மோசமாக தமிழ் மக்கள் தொடர்பில் பகிரங்கமாக பேசியிருக்கிறார். இதனை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவருக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இலங்கையின் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. தேரரின் இந்த கருத்தை முஸ்லிம் சமூகமும், சிங்கள சமூகமும் வெட்கக்கேடாக நோக்குகிறது. இவ்வாறான வன்மமான பேச்சுக்கள் தடை செய்யப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியூதின் பாராளுமன்றத்தில் முன்வைத்த வட மாகாண மக்கள் தொடர்பிலான பிரேரணையை ஆமோதித்து பேசிய அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில், கடந்த காலங்களிலும் இவ்வாறான வன்மமான பேச்சுக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாண்டவமாடியது. இவற்றை இல்லாமலாக்க பாராளுமன்றம் வன்மமான பேச்சுக்களுக்கு எதிரான சட்டமூலத்தை கொண்டு வர வேண்டும். கடந்த காலங்களில் அது தொடர்பில் ஆலோசனைகள் இடம்பெற்றிருந்தாலும் அவை இன்னும் அமுலுக்கு வராமல் இருப்பது கவலையளிக்கிறது. 

அண்மைய மக்கள் எழுச்சிக்கு பின்னர் இந்த நாட்டில் இனவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. எங்கு ஊழல் நடந்தாலும் சரி அவற்றை தட்டிக்கேட்டு இளைஞர்கள் லஞ்சம் ஊழலில்லாத தேசமாக எமது நாட்டை கட்டியெழுப்ப விழைகிறார்கள். ஊழலில்லாத அரசாங்கம் அமைக்க மக்கள் இப்போது தயாராகிவிட்டனர்.

அது போன்றுதான் வட மாகாண முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் கடந்துள்ள சூழ்நிலையில் அவர்கள் அங்கிருந்து அன்று வெளியேற்றப்பட்டமையானது மிகப்பெரிய மனித அவலமாக பார்க்கப்படுகிறது. 

33 வருடங்கள் கடந்தும்கூட வட மாகாண முஸ்லிம்கள் தமது வாழ்வியல் உரிமைகளை, வீட்டுரிமைகளை, காணியுரிமைகளை, வாக்குரிமை, கல்வியுரிமை, பொருளாதார உரிமைகள் இழந்து தமது தேவைகளுக்காக புத்தளத்திலிருந்து மன்னாருக்கு செல்லும் பாதை உரிமைகளையும் இழந்து நிற்கும் தருவாயில் மனித உரிமைகள் தொடர்பில் இந்த நாட்டில் பேசும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு சரி இந்த நாட்டை ஆளும் அரசாங்கமும் சரி, பாராளுமன்றமும் சரி இந்த அவலநிலையை போக்க இன்னும் முன்வரவில்லை. இந்த மக்களின் தேவைகளை சரியாக அடையாளம் கண்டு தீர்வை வழங்கவும் அந்த மக்களின் உரிமைகளை மீள பெற்றுக்கொடுக்கவும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நிறுவப்பட வேண்டும்.

குறிப்பிட்ட 03 அல்லது 05 மாதங்களுக்குள் அந்த மக்களின் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் வழங்க அவற்றுக்கான நிதியுதவிகளை வழங்கும் பொறுப்பை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தி நீண்டகாலமாக அகதி வாழ்க்கை வாழும் அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வழிசமைக்கப்பட வேண்டும். 

இன்றும் வட மாகாண மக்கள் புத்தளத்தில் தமது வாக்குரிமையைகூட இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க முன்னாள் அமைச்சர் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப், றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் போன்ற தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் பலரும் முயற்சித்திருந்தாலும் அந்த பிரச்சினைகள் இன்னும் தீர்க்கமுடியாமல் இருக்கிறது. இனியும் அவை தொடர இடமளிக்க முடியாது.

இந்த அவலநிலையை போக்க இந்த பாராளுமன்றம் கடமைப்பட்டுள்ளது. சபையில் வீற்றிருக்கும் சிரேஷ்ட அமைச்சர் சுசில் பிரமஜயந்த இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையிலும், ஜனாதிபதியிடமும் பேசி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், வட மாகாண மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது போன்று கிழக்கு மாகாண மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தீர்வுத்திட்டமும் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்

No comments:

Post a Comment