2024 ஆம் ஆண்டின் கல்வித்துறை பாரிய திருப்பு முனையாக அமையவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடந்த விசேட கலந்துரையாடலிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர், எதிர்வரும் ஆண்டு மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரிக்கும் நாட்டின் தேசிய கல்விக்கும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமையும். இலங்கைக்கான கல்வியை மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையாக மாற்றுவதற்கான, பத்தாண்டு திட்டத்திற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதன்படி இதுவரை நடைபெற்ற பரீட்சைகள் மத்திய மற்றும் வழமையான கல்வி முறைக்கு பதிலாக நவீன தொழில்நுட்ப முறைகள் மற்றும் கல்வி முறைகளுக்கு ஏற்ப உலகிற்கு வளமான மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதற்கான அங்கீகாரமே வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உப செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவில் நானும் அங்கம் வகித்தேன். மேலும் அக்குழுவில் விசேட நிபுணர்களான 25 அங்கத்தவர்கள் முன்வைத்த யோசனைகளை கருத்தில் கொண்டு 2024 ஆம் ஆண்டு கல்வி முறையில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
நாட்டுக்கு வருடந்தோறும் பெருமளவிலானோர் சுற்றுலா வரும் நாடாகவும், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு அதிகளவு புலமைப் பரிசுகளை வழங்கும் நாடாகவும் ரஷ்யா காணப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவுடனான தொடர்பு மேலும் வலுவடையும் என நான் நம்புகிறேன்.
மேலும், ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ வித்தியாலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் தற்போது இலங்கையின் ஒரே ஒரு பசுமைப் பல்கலைக்கழகமான NSBM இல் பெருமளவு மாணவர்கள் உயர் கல்வியை கற்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ரஷ்ய அரசாங்கம் மற்றும் ரஷ்ய கல்வி அமைச்சு என்பன எமது மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை செய்ததற்கமைய மஹிந்த ராஜபக்க்ஷ வித்தியாலய மாணவ மாணவிகள் 7 பேருக்கும், ஆசிரியர் இருவர் மற்றும் பெற்றோர்களின் பிரதிநிதி ஒருவருக்கும் ரஷ்யாவில் மூன்று மாத கால கல்வி சுற்றுலாவுக்கான விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கிணங்கவே இவை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கல்லூரி நூலகத்திற்கு ரஷ்ய கல்வி புத்தகங்களின் தொகுப்பும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டதுடன், கல்லூரி அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அடிக்கல்லும் நடப்பட்டது.
No comments:
Post a Comment