வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் மரண வீதம் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 7, 2023

வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் மரண வீதம் அதிகரிப்பு

வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் மரண வீதம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேரசிங்க தெரிவித்தார்.

கண்டி செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, கண்டி மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியர் ஒருவரின் பரிந்துரையின்றி மருந்தின் அளவை விடவும் அதிகளவு மருந்தை உட்கொள்வது, வைத்தியரின் பரிந்துரையின்றி தான் நினைத்த விதத்தில் மருந்து வகைகளை உட்கொள்ளல் போன்ற காரணங்களால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனை பரவலாக அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்தார்.

வைத்திய ஆலோசனையின்படி குறிப்பிட்ட மாத்திரை அளவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். சிலர் தாம் நினைத்தவாறு மாத்திரை அளவை மாற்றி மருந்துகளை உட்கொள்கின்றனர்.

இவற்றை தவிர்க்க வேண்டும். வைத்தியரின் பரிந்துரையின்றி வலி நிவாரணி மருந்துகளை தாம் நினைத்தவாறு நினைத்த போதெல்லாம் உட்கொள்கின்றனர்.

அதேபோல் இரண்டு மூன்று நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் ஒரு வைத்தியரின் ஆலோசனைப்படி பெற்றுக் கொண்ட மருந்துகளை பிறிதொரு வைத்தியரிடம் கூறாது விடுவதால் மருந்தின் வீரியம் மாற்றப்படுவதுடன் அவற்றின் கலவையானது புதிய ஒரு இரசாயன மாற்றத்திற்கு உட்படலாம். அதாவது ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத மருந்துகளை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் மருந்துச் சேர்வை மாற்றப்படலாம்.

எனவே இதுபோன்ற விடயங்கள் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் அறிந்து வைத்திருப்பதுடன் பொதுமக்களும் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment