கோவணத்துடன் சென்றவர்களிடம் ஆவணம் கேட்கிறீர்களா? வடக்கில் 5,941 ஏக்கர் காணி அபகரிக்கும் வர்த்தமானியை உடன் மீளப் பெறுக - வலியுறுத்திய ரவிகரன் எம்.பி - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, May 8, 2025

demo-image

கோவணத்துடன் சென்றவர்களிடம் ஆவணம் கேட்கிறீர்களா? வடக்கில் 5,941 ஏக்கர் காணி அபகரிக்கும் வர்த்தமானியை உடன் மீளப் பெறுக - வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

496795644_1302693125194545_6777396023484875319_n%20(Custom)
கோவணத்துடன் சென்ற மக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களா, எனவும் கடந்தகால கொடுங்கோல் அரசுகளைப் பின் தொடர்கின்றீர்களா எனவும், சபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாணத்தில் சுமார் 5,941 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி உடனடியாக மீளப் பெறுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (08) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கில் கரையோரத்தில் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயல் இடம்பெறுகின்றதா?

கடந்த 2025.03.28ஆம் திகதி வெளிடப்பட்ட 2430ஆம் இலக்க வர்த்தமானி மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,669 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,703 ஏக்கரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 515 ஏக்கரும், மான்னார் மாவட்டத்தில் 54 ஏக்கருமாக மொத்தம் 5,941 ஏக்கர் காணிகள், காணி நிர்ணயக் கட்டளைச் சட்டம் 5(1)ஆம் பிரிவில் அரச காணிகளாக அபகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

குறிப்பாக குறுகிய காலத்தில் உரிய பதிவுகள் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்த மக்களிடமிருந்து அவர்களின் காணிகளைப் பறிக்கப்போகின்றீர்களா? இது வடக்கு மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக தெரியவில்லையா?

அந்த மக்கள் 2009 இல் இடம்பெயரும்போது. எதனையும் கொண்டுசெல்லவில்லை. அப்போது இனவாதத்தின் கொடூரம் நடந்தது.

கோவணத்தோடு சென்ற மக்களிடம் ஆவணங்கள் கேட்கின்றீர்களா? ஏற்கனவே கொடுமை செய்த இனவாத அரசுகளை நீங்களும் பின் தொடருகின்றீர்களா?

வடக்கு, கிழக்கு மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம். எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *