பொறுத்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் வரிசை யுகம் : நாடு வங்குராேத்தடைய ஜனாதிபதி காரணமில்லை - ரங்கே பண்டார - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 24, 2023

பொறுத்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் வரிசை யுகம் : நாடு வங்குராேத்தடைய ஜனாதிபதி காரணமில்லை - ரங்கே பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம்)

மின்சார கட்டண அதிகரிப்பு மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத சுமை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். என்றாலும் குறுகிய காலத்துக்காவது இதனை தாங்கிக் கொள்ளாவிட்டால் மீண்டும் வரிசை நிலைமைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை அதில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் இருக்கும் தொடர்புகள் மூலம் பாெருளாதார நெருக்கடியை போக்கிக் கொள்ள உதவிகளை பெற்று வருகிறார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக் கொள்வதற்காக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் முடிந்தளவு பூரணப்படுத்தி இருக்கிறது. அதில் இடம்பெற்ற சில குறைபாடுகள் காரணமாக இரண்டாம் கட்ட உதவியை பெற்றுக் கொள்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அதற்கான இணக்கப்பாடு தற்போது ஏற்பட்டிருக்கிறது. நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவி இலங்கைக்கு வழங்குவதற்கு நாணய நிதியத்தின் செயற்குழு சபை மட்டத்தில் இணக்கப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக நாணய நிதியத்தின் பேச்சாளர் பீடர் புறூக் தெரிவித்திருக்கிறார்.

எனவே இந்த உதவிகள் கிடைக்கப் பெற்று, பொருளாதார நிலைமை படிப்படியாக சரி செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். நாடு வங்குராேத்து நிலைக்கு செல்ல ஜனாதிபதி காரணமில்லை.

வங்கு அடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்பவே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார். அதனால் மக்கள் பொருளாதார நெருக்கடி நிலையில் இருக்கும் இந்த சந்தரப்பத்தில் மின் கட்டணம் மற்றும் ஏனைய கட்டண அதிகரிப்புகள் தாங்க முடியாத சுமையாகும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

இருந்தபோதும் குறுகிய காலத்துக்காவது இதனை பொறுத்துக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் மீண்டும் கடந்த வருடத்தில் இடம்பெற்றதைப்போல் எரிபொருள், எரிவாயு பெற்றுக் கொள்ள வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment