பம்பலப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக மேம்பாலத்தை பார்வையிட அமைச்சர் பந்துல குணவர்தன அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்தை புனரமைக்கும் வரை தற்காலிக மேம்பாலத்தை நிர்மாணிக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுதிருந்தார்.
இதற்கிணங்க இப்பணியை அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்புச் சட்டக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்து முடித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பம்பலப்பிட்டி பயணிகள் மேம்பாலத்தின் தூண்களுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி, கடல் அரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பழுதடைந்துள்ளது.
புதிய மேம்பாலத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிகள் முடிவுறும் வரைக்கும் தற்காலிக பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நிர்மாணிக்கப்பட்ட இத்தற்காலிக பாலத்தை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் பார்வையிட்டார்.
தற்போதுள்ள பயணிகள் மேம்பாலம் மற்றும் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள வளாகத்தின் நிலைமையையும் அமைச்சர் பார்வையிட்டார். நாட்டில் தற்போது சுமார் 30 ஆபத்தான பாலங்கள் பழுதடைந்துள்ளன.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் தற்போதுள்ள பயணிகள் மேம்பாலத்தின் நிலைமையை இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரயில்வே திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு கூட்டுத்தாபன அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
சிறிது காலத்திற்கு முன்பே இதனை புனரமைப்பதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கொவிட் தொற்று நிலைமை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் அபிவிருத்திப் பணிகளுக்கும் நிதியை பயன்படுத்த இடமளிக்கப்படவில்லை.
இதனால் இந்தப் பாலம் உட்பட இலங்கை முழுவதும் 30 பாலங்களின் பணிகள் முடங்கியுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய நிதி உதவி நிறுவனங்களின் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாலத்தின் அபாய நிலைமை காரணமாக ஜனாதிபதி இதற்கான விசேட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இரயில்வே திணைக்களம் மற்றும் அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்புச் சட்டக் கூட்டுத்தாபனத்திடமிருந்து கிடைக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்தி கூடிய விரைவில் தற்காலிக பாலம் ஒன்றை நிர்மாணித்து, அடுத்த வருடத்திற்குள் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இரண்டு நிலையான பாலங்களை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பின் பின்னர், 2024 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதுமுள்ள ஆபத்தான பாலங்களை புனரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment