இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம் என பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளர்களின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம்.
இலங்கை பெற்றுக் கொண்டுள்ள கடன் தொடர்பில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளன. அந்த வகையில் வெகு விரைவில் சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை அரசாங்கம் மேற்கொள்ள முடியும்.
அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி நாட்டுக்கு கிடைத்ததும் நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
தேர்தல் சம்பந்தமாக பல்வேறு தரப்பிலும் பல தரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு நாட்டில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றே கூற வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணி மக்கள் மத்தியில் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வந்தாலும் அந்தக் கட்சி வங்குரோத்து அடைந்துள்ள கட்சி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment