(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மக்களின் அடிப்படை உரிமையை மீறுகிறது. அதனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இதனை வாபஸ் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஊடக சுதந்திரத்தை முற்றாக இல்லாமல் செய்யும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை நீக்கிக் கொள்ள அரசாங்கம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
230 மில்லின் சனத் தொகை உள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்த சட்டமூலத்தை அகற்றிக் கொள்ள நேரிட்டது.
ஏனெனில் கூகுல், வட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் நீங்கிக் கொள்வதாக அச்சுறுத்தியிருந்தன. அந்த நிறுவனங்கள் எமது நாட்டில் இருந்து நீங்கிக் கொண்டால் எமது நாட்டுக்கான நேரடி வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு என்ன நடக்கும் என்பதை அரசாங்கம் சிந்தித்து பார்க்க வேணடும்.
அத்துடன் இந்த சட்டமூலம் மக்களின் மனித உரிமையை மீறும் சட்டமூலமாகும். நாட்டின் ஜனநாயக உரிமையை மீறும் சட்டமூலமாகும். இந்த சட்டமூலம் ஊடாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.
அதனால் இது ஜனநாயக நாடு, ஏகாதிபத்திய நாடு அல்ல. அதனால் ஜனநாயகத்தை சீரழிக்கின்ற இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு கருத்துச் சுதந்திரத்துக்கான சட்டமூலம் ஒன்றை கொண்டு வாருங்கள். அதன் மூலம் அனைத்து தரவுகளையும் பெற்றுக் கொள்ளவதற்கான சந்தர்ப்பத்தை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment