அனைத்து துறைகளில் இருந்தும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் : கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 6, 2023

அனைத்து துறைகளில் இருந்தும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் : கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் அனைத்து துறைகளில் இருந்தும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆனால் இதற்கான காரணத்தை ஆராய்ந்து இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அரசாங்கமே புத்திஜீவிகளை வெளியேற்ற தூண்டிவருவதாக இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் முக்கியமான அனைத்து துறைகளைச் சேர்ந்த புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். உலகில் இவ்வாறு புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் நாடுகளில் ஈரான், யமன், மியன்மார், வட கொரியா போன்றன இருப்பதுடன் உலகில் புத்திஜீவிகளை சேர்த்துக் காெள்ளும் நாடுகளாக சுவீடன், டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.

அத்துடன் கடந்த சில வருடங்களாக புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் வீதம் அதிகரித்து செல்கிறது. ஆனால் இது தொடர்பாக தேடிப்பார்க்க அரசாங்கம் அமைச்சரவை உப குழுவொன்றையாவது அமைக்க தவறி இருக்கிறது. குறைந்தபட்சம் பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றையாவது அமைக்க தவறி இருக்கிறது.

ஆனால் புத்திஜீவிகள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கை கடந்த காலங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. 1974 இல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் இவ்வாறு புத்திஜீவிகள் வெளியேற ஆரம்பித்தபோது, இது தொடர்பாக தேடிப்பார்க்க அமைச்சரவை உப குழுவொன்றை அமைத்து நடவடிக்கை எடுத்திருந்தது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி நாட்டை ஸ்திரப்படுத்த சிறந்த வாய்ப்பு என அரசாங்கம் தெரிவித்து வந்தது. ஆனால் வெரிடேச் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியால் எமது நாட்டில் நூற்றுக்கு 28 வீதமானவர்களுக்கே நன்மை கிடைக்கிறது. ஆனால் தற்போது நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவி தற்போது தாமதமடைந்துள்ளதால் அந்த தாெகையும் குறைவடையும் என்றே நினைக்கிறேன்.

அத்துடன் நாட்டில் இருக்கும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களை தேடிப்பார்க்கும்போது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வாய்ப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளமை, அரசியல் ஸ்திரதன்மை இல்லாமை, வெளிநாடுகளில் வழங்கப்படும் அதிக சம்பள வசதிகள், பணவீக்க அதிகரிப்பு, உணவு பாதுகாப்பு இல்லாமை போன்ற விடயங்களே அமைந்துள்ளன.

அரசாங்கம் தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்கு வரி அதிகரிப்பையே மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த வரி அதிகரிப்பு சாதாரண மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் வகையிலேயே மேற்கொண்டிருக்கிறது. தனவந்தர்கள் பெரும் நிறுவனங்களுக்கு எந்தவித வரி அதிகரிப்பும் இல்லை.

எனவே அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்கள் மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கை போன்ற காரணங்களாலே புத்திஜீவிகளின் வெளியேற்றம் அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் புத்திஜீவிகளின் வெளியேற்றத்தில் எமது நாடு உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது. அதனால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத்தவறினால் நாட்டின் முக்கியமான அனைத்து துறைகளும் செயலிழக்கும் அபாயம் இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment