மக்கள் வாழ முடியாத நிலையில் இருக்கும்போது அரசாங்கம் மனசாட்சி இல்லாமல் எரிவாயு விலையை அதிகரித்திருக்கிறது - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 6, 2023

மக்கள் வாழ முடியாத நிலையில் இருக்கும்போது அரசாங்கம் மனசாட்சி இல்லாமல் எரிவாயு விலையை அதிகரித்திருக்கிறது - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கு பதிலாக பொருளாதாரத்தை நசுக்கும் கொள்கையையே கடைப்பிடித்து வருகிறது. அதனால் வருமான வழிகள் குறைவடைந்து மக்கள் வாழ முடியாத நிலையில் இருக்கும் தருவாயில் அரசாங்கம் மனசாட்சி இல்லாமல் எரிவாயு விலையை அதிகரித்திருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக பொருளாதாரத்தை நசுக்கும் கொள்கையையே பின்பற்றி வருகிறது. பொருளாதாரம் சுருக்கப்படுவதன் மூலம் வருமான வழிகள் குறைவடையும்போது நாட்டு மக்கள் எவ்வாறு வாழ முடியும் என கேட்கிறேன்.

அரசாங்கம் சமையல் எரிவாயு விலையை 343 ரூபாவால் அதிகரித்திருக்கிறது. நீர் கட்டணத்தை அதிகரித்திருக்கிறது. மின்சார கட்டணத்தை 3ஆவது தடவையாகவும் அதிகரிக்க தீர்மானித்திருக்கிறது. ஆனால் அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் புள்ளிவிபரங்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் பணவீக்கம் குறைவடைந்துள்ளமை மக்களுக்கு உணரக்கூடியதாக இல்லை.

அதேநேரம் கடந்த 48 மணி நேரத்தில் 11 பேர் காணாமல் போயிருக்கின்றனர். அதில் 5 பேர் சிறுவர்கள். அத்துடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையின் பிரகாரம் இந்த நாட்டில் 10 பேரில் 6 பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். அதாவது நாட்டின் மொத்த சனத் தொகையில் 221 இலட்சம் பேரில் 123 இலட்சம் பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

போதைப் பொருள் பாவனை அதிகரித்து செல்கிறது. புதுவகை போதைப் பொருள் ஒன்று வந்திருப்பதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இவ்வாறான நிலையில் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லாத வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

அத்துடன் மனசாட்சிக்கு இணங்கவா அமைச்சரவை கேஸ் விலை அதிகரிக்க இணக்கம் தெரிவித்தது என கேட்கிறேன். பொருளாதாத்தை சுருக்கிக் கொண்டு மக்கள் மீது சுமையை அதிகரிக்கிறது. அதனால் இது தொடர்பில் அரசாங்கம் உணவு ரீதியாக செயற்பட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment