இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு : இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை வலுப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து கவனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 17, 2023

இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு : இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை வலுப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து கவனம்

இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

“ஒரே பட்டி - ஒரே பாதை” சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (17) காலை பீஜிங்கில் இடம்பெற்றதுடன் இது தொடர்பில் இருநாட்டுத்தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

அண்மைய பொருளாதார நெருக்கடி மற்றும் பாம்ஒயில் மீதான தடை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஆசிய நாடுகள் பலவற்றுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முறைப்படுத்தவும் இலங்கை செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்தோனேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு இது மிகவும் பொருத்தமான சமயம் என இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் போக்குகள் மற்றும் ஆசிய பிராந்தியத்திலுள்ள சிறிய நாடுகள் என்ற வகையில் அந்த சவால்களை எவ்வாறு எதிர்கொண்டது என்பது குறித்து இருநாட்டுத் தலைவர்கள் நீண்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பில் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ரெடினோ மர்சூடி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இலங்கை தரப்பில் இருந்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment