தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து கிடைக்காமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் - இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 17, 2023

தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து கிடைக்காமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் - இம்ரான் எம்.பி

தமிழ் மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, கபில நுவான் அத்துக்கோரள ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

திருகோணமலை மாவட்டத்தில் தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம், தமிழ் மக்கள் சுமார் 75 வீதத்திற்கும் மேல் வாழ்கின்றனர். அதேபோல ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமுகமளிக்கும் அதிகமான அதிகாரிகளும் தமிழ் மொழி பேசுவோராக உள்ளனர்.

இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அதிகமான விடயங்கள் சிங்கள மொழியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கள - தமிழ் உரை பெயர்ப்பாளர்கள் எவரும் நியமிக்கப்பட்டிருக்கவுமில்லை. இதனால் பல அதிகாரிகள் தமது கருத்துக்களை சரியாக முன்வைப்பதில் இடர்பாடுகளை அனுபவிப்பதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. உரை பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு சமகாலத்தில் உரை பெயர்ப்புச் செய்யும் வசதிகள் செய்யப்பட்டன. இதனால் யாரும் தமது கருத்துக்களை தெளிவாகச் சொல்லக் கூடியதாகவும், கேட்கக் கூடியதாகவும் இருந்தது. தற்போது அந்த நிலை மாற்றமடைந்து காணப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டம் தமிழ் மொழி பேசுவோர் அதிகமுள்ள மாவட்டம். இந்த மாவட்டத்திலேயே தமிழ் மொழி புறக்கணிப்படுவது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன் என்றார்.

இதற்குப் பதிலளித்த அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி, இந்தக் குறைபாட்டை நானும் உணர்கின்றேன். தவறு இடம்பெற்றுள்ளமை தெரிகின்றது. அடுத்து வரும் கூட்டங்களில் இதுபோன்ற குறைபாடுகள் வராது கவனித்துக் கொள்வேன் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment